Politics

"ஒரு கூட்டணியை கூட அமைக்க முடியாத அண்ணாமலை காணுவது எல்லாம் பகல்கனவுதான்" - கே.பாலகிருஷ்ணன் விமர்சனம் !

சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவிப்பதோடு நன்றியை தெரிவித்து கொண்டார். தருமாபுரம் ஆதனத்தை மிரட்டிய சம்பவம் மிகவும் கேவலமானது என்றும் இதில் பாஜகவினர் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இந்த ஆதினத்திற்கு சென்ற ஆளுநர், அண்ணாமலை ஆகியோர் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஒரு வேட்பாளர் கூட அறிவிக்க வில்லை. ஏன் என்றால் வேட்பாளர் கிடைக்கவில்லை போல என்று கூறிய அவர், தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக தோல்வி என்பது எங்களுக்கு வெற்றி அல்ல. அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காமல் செய்வதே எங்களது இலக்கு.  தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மிக வலுவாக உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை தனது பேச்சில் நாகரீகம் கடை பிடிக்க வேண்டும் என்ற அவர், தரம் தாழ்ந்த அரசியலை இது வரை உள்ள பாஜக தலைவர்கள் இது போன்று நடந்து கொள்ளவில்லை.  இது போன்று பேசுவதை அண்ணாமலை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

சிவில் நீதிபதி ரத்து விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இதற்கு அதிகாரிகளே காரணம் என்றும் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் இதே நிலை தான் கடைபிடிக்க பட்டு உள்ளதாகவும், இது போன்ற தவறுகள் இனி வருங்காலங்களில் நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் என்பதே இல்லாமல் பேசுகிறார். கூட்டணியை கூட உருவாக்க முடியாத அண்ணாமலை தென் மாவட்டங்களில் திமுக வெற்றி பெறாது என்று கூறுவது பகல் கனவு என்றும் பாஜக தமிழகத்தில் வருவதை கூட பகல் கனவாக தான் காண முடியும் என்றார். பாரபட்சமான தேர்தல் ஆணையமாகவே உள்ளது என்று குற்றம் சாட்டிய அவர், பாஜக சொல்வதை கேட்பதை மட்டுமே கேட்கும் ஆணையமாக உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

இ.வி.எம் இயந்திரம் மற்றும் விவி பேட் குறித்து எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகளை கூட ஏற்று கொள்ள முடியாத தேர்தல் ஆணையம் பாஜக சொல்வதை மட்டுமே கேட்கும் நிலை உள்ளது என தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் சிபிஎம் 2 இடத்தில் நின்றாலும் 40 தொகுதியும் எங்கள் தொகுதி தான். 40 பேரும் எங்களது வேட்பாளர் என்றே பணியாற்றுவோம்.  எங்களது ஒரே நோக்கம் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே என்றார்.

Also Read: "திமுகவை அழிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் அழிந்து போய்விட்டார்கள்" - அமைச்சர் அன்பில் மகேஸ் !