Politics

Facebook Live-ல் சுட்டுக் கொல்லப்பட்ட சிவசேனா நிர்வாகி - பாஜக கூட்டணி ஆட்சியில் தொடரும் அவலம் !

பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களிலும், பாஜக கூட்டணி வைத்திருக்கும் மாநிலங்களிலும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், துப்பாக்கி கலாசாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் மகாராஷ்டிராவில் மீண்டும் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தகிசர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் கொசால்கர். சிவசேனா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ வினோத் கொசால்கரின் மகனான இவர், முன்னாள் கவுன்சிலர் ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவசேனா கட்சி பிரிந்த நிலையில், தற்போது உத்தவ் தாக்கரே அணி சிவசேனா கட்சியில் இருக்கின்றனர்.

இந்த சூழலில் அபிஷேக் கொசால்கருக்கும், உள்ளூரில் பிரபலமான மோரீஸ் பாய் என்பவருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்துள்ளது. மேலும் மோரீஸ் பாய் சிவசேனாவின் இணைய இருந்த நிலையில், அதனை அபிஷேக் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மோதல் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், இதில் சில பெரிய தலைவர்கள் தலையிட்டு இருவருக்கும் சமாதானம் செய்து வைத்ததாக சொல்லப்படுகிறது.

மோரீஸ் பாய் - அபிஷேக் கொசால்கர்

இந்த நிலையில் மோரீஸ் பாய் சம்பவத்தன்று தனது அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இலவச சேலை கொடுக்கும் அந்த நிகழ்ச்சிக்கு அபிஷேக் கொசால்கருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிகழ்வை விளம்பரப் படுத்த வேண்டும் என்ற நோக்கி, இதனை முகநூல் பக்கத்தில் லைவாக வீடியோவும் வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இருவருக்கும் இடையே சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென எழுந்த மோரீஸ் பாய், தனது அறையின் உள்ளே சென்று துப்பாக்கியை எடுத்து வந்து, முன்னாள் கவுன்சிலர் அபிஷேக் கொசால்கரை சட்டென்று சுட்டார். சுமார் 3 - 4 முறை சுட்டுள்ளார்.

இதில் இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அபிஷேக்கை கண்டதும் பயத்தில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார் மோரீஸ் பாய். துப்பாக்கி சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தவர்கள் உடனே இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த அபிஷேக் மீது 4 குண்டுகள் பாய்ந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மோரீஸ் பாயின் அலுவலகத்தை அபிஷேக்கின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இந்த நிகழ்வினால் அங்கே போலீசார் குவிக்ப்பட்டுள்ளனர். உள்ளூர் கிரிமினலாக கருதப்படும் ஒருவர் ஒரு அரசியல் கட்சி தலைவரை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்த மோரீஸ் பாய் தனியாக தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவர் பிரபலமாக வேண்டும் என்றே பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது செய்து வந்துள்ளார். எல்லாவற்றிக்கும் மேலாக அபிஷேக் எந்த வார்டில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று விரும்புகிறாரோ அதே வார்டில் மோரீஸ் பாயும் போட்டியிட விரும்பினார் என்று கூறப்படுகிறது.

மோரீஸ் பாய் மீது கொலை, ஏமாற்று, பாலியல் வன்கொடுமை, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருக்கிறது. பெண் ஒருவர் தன்னிடம் லட்சக்கணக்கான பணத்தை ஏமாற்றிவிட்டதாக இவர் மீது கொடுத்த புகாரின் பேரில் 2022-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவருக்கும் முன்னாள் கவுன்சிலர் அபிஷேக்கிற்கும் இடையே அரசியல் தொடர்பான மோதல்களும் இருந்துள்ளது.

இதனால் மோரீஸ் பாய், அபிஷேக்கை வேண்டுமென்றே திட்டமிட்டு கொலை செய்தாரா என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த நிகழ்வுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தற்போது கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரம் கூட அம்மாநில ஆளுங்கட்சியான ஷிண்டே தலைமையிலானா சிவசேனா கட்சியின் நிர்வாகி ஒருவரை, கூட்டணி கட்சியான பாஜக எம்.எல்.ஏ ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பிரதமர் மோடி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (OBC) சேர்ந்தவர் அல்ல - ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு !