Politics

பொய் செய்தி பரப்பும் பாஜக : இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்படவில்லை - பிரியங்கா காந்தி !

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் மீது கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் வைத்தனர். தொடர்ந்து இவரை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்றும், தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தியபோது கூட இவர்களின் கோரிக்கைக்கு மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது.

மேலும் போலிஸாரை கொண்டு போராட்டத்தை அடக்கப் பார்த்தது. ஆனால் மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தங்களின் போராட்டத்தை நடத்தினர். புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது அவர்களை போலிஸார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தொடர்ந்து இந்த சம்பவம் பூதாகரமாக மாறிய நிலையில், பிரிஜ் பூஷன் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். எனினும் தற்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த வீரர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் சாக்ஷி மாலிக், இனி தான் மலியுத்த போட்டிகளில் பங்கேற்கப்போவதில்லை என்றும், இதில் இருந்து விலகுவதாக கண்ணீருடன் அறிவித்தார். இவரைத்தொடர்ந்து மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வீரேந்தர் சிங் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திருப்பி கொடுப்பதாக அதிரடியாக அறிவித்ததோடு, பஜ்ரங் புனியா, பிரதமரின் இல்லத்தின் நுழைவாயிலில் விருதை வைத்தார்.

அதோடு சஞ்சய் சிங்குக்கு எதிராகவும், வீரர்களுக்கு ஆதரவாகவும் சக மல்யுத்த வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக பாஜக பொய் செய்தியைப் பரப்பி வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு பின்வருமாறு :

"இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக பாஜக பொய் செய்தியைப் பரப்பி வருகிறது. மல்யுத்த சங்கம் கலைக்கப்படவில்லை; அதன் செயல்பாடுகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காரணம், அனைவரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தி சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற நினைக்கிறது பாஜக. பாதிக்கப்பட்ட பெண்களின் குரலை அடக்க இந்த நிலைக்கு செல்ல வேண்டுமா?

நாட்டிற்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனைகள் பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, பாஜக அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்; குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாஜக வெகுமதி அளிக்கிறது. போராட்டத்தை வாபஸ் வாங்குவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதியை உள்துறை அமைச்சர் அமித் ஷா மறந்துவிட்டார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் பாஜக எம்.பி பிரிஜ் பூஷன், அகம்பாவத்தின் உச்சத்துக்கே சென்று, அடுத்த தேசியப் போட்டிகள் அவரது சொந்த ஊரில், அவர் படித்த கல்லூரி மைதானத்தில் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளார். இந்த அநீதியால் தற்போது தோற்கடிக்கப்பட்ட ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்த்தை தொடர்ந்து, சில வீரர்கள் தங்கள் விருதுகளை திருப்பித் தரத் தொடங்கியுள்ளனர். இதனால் பாஜக அரசு பல்வேறு வதந்திகளைப் பரப்புகிறது.

எங்கெல்லாம் பெண்கள் தாக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் ஒன்றிய பாஜக அரசு தனது முழு பலத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகவும் இருக்கிறது. இன்று அனைத்து துறைகளிலும் பெண்களின் தலைமைத்துவம் பற்றி பேசப்படுகிறது. ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் முன்னேறி செல்லும் பெண்களை துன்புறுத்துவதிலும், அடக்குவதிலும் மும்முரமாக இருக்கின்றனர். இதையெல்லாம் பெண்களும், நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்."

Also Read: “அந்த பயம் இருக்கணும்.. பெரியாரின் பெயரை உச்சரித்த உடனே” : நாடாளுமன்ற நிகழ்வை விவரித்த எம்.எம்.அப்துல்லா!