Politics

146 எதிர்க்கட்சி MPக்களை இடைநீக்கம் செய்த மோடி அரசு : இது ஜனநாயகம் அல்ல யதேச்சதிகாரம்!

ஆளும் கட்சி எம்.பிக்கள் எதிர்க்கட்சி எம்.பிக்களை பேசவிடாமல் தடுத்து வெளியேற்றி தங்களின் எண்ணம் போல் செயல்படுவதற்கான மன்றமாக மாற்றி நாடாளுமன்றத்தின் தரத்தை குறைத்திருக்கிறது மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு.

யார் ஆளும்கட்சி உறுப்பினர் யார் எதிர்க்கட்சி உறுப்பினர் என்பதற்கு அப்பாற்பட்டு அவையில் எத்தகைய விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள், எப்படிப்பட்ட விவாதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள், அதன் மூலம் மக்களுக்கு பயனுள்ள சட்டங்கள் கிடைக்கப்பெற்றதா என்பது தான் சட்டம் இயற்றும் மன்றமான நாடாளுமன்றத்திலிருந்து மக்கள் எதிர்பார்ப்பது.

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் இது வரை 146 எம்.பிக்களை இடை நீக்கம் செய்து பத்துக்கும் மேலான மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறது. இது ஜனநாயகத்தின் மாபெரும் வீழ்ச்சி. நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்திலிருந்து இருவர் மையப்பகுதிக்குள் குதித்தி கலர்புகை குண்டுகளை வீசுகிறார்கள். இது பாதுகாப்பு அமைப்பின் தோல்வி தானே? இது குறித்து ஏன் விவாதிக்கவோ பதிலிளிக்கவோ மறுக்கிறார்கள்? சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற தாக்குதல் நடந்த அதே நாளில் இந்த சம்பவம் நடைபெற்றி இருக்கிறது.

இந்த தாக்குதல் நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது நடத்தப்பட்டது அல்ல; இந்திய ஜனநாயகத்தின் மீதும், இந்தியாவின் ஆன்மாவின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் ” என்று அப்போது பேசினார் மோடி. ஆனால் இந்த சம்பவம் குறித்து இது வரை பிரதமர் மோடி நாடாளுமத்தில் வாய் திறந்து விளக்கம் கொடுக்கவே இல்லை. பா.ஜ.க உறுப்பினர் மூலமாகத்தான் இந்த இளைஞர்கள் பார்வையாளர் சீட்டுகளைப் பெற்றிருக்கிறனர்.

2001 சம்பவத்தில்கூட தாக்குதல் நடத்தியவர்களால் நாடாளுமன்ற அவைக்குள் நுழைய முடியவில்லை. இப்போது அவர்கள் அவைக்குள் நுழைந்து உறுப்பினர்களின் மேஜைக்கு மேல் ஓடுவதை தேசமே பார்த்தது. நாடே கொந்தளித்த சம்பவத்தை பற்றி விவாதிப்பதை விட உள்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் வேறு என்ன முக்கிய வேலை இருந்துவிட போகிறது.

இது தான் சாமாணிய மக்களின் கேள்விகள். மக்கள் கேட்கும் கேள்வியை நாடாளுமன்றத்தில் கேட்க செய்வதற்காகவே மக்கள் தங்களின் பிரதிநிதிகளே அங்கே அனுப்பி வைக்கிறார்கள். கிட்டத்தட்ட 140 எம்.பிக்களை பதவி நீக்கம் செய்திருப்பதன் மூலம் நாட்டில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பிரதிநிதிகளை தூக்கியெரிந்து இருக்கிறது மோடி அரசு. சுமார் 30 கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களை வெளியேற்றி அவை நடவடிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறது. வரலாற்றில் இப்படி ஒரு துயரமான சம்பவம் நடைபெற்றதே இல்லை என்கிறார்கள் அரசியல் விமசகர்கள்.

இதை கண்டிக்க வேண்டிய ஊடகமோ ’மிமிக்கிரி’ விவாதத்தை நடத்துகிறது” என்று வேதனை தெரிவிக்கிறார் ராகுல் காந்தி. பெரும்பான்மையை கொண்டு சிறுபான்மையை அடக்குவது தான் ஜனநாயகம் என்று நினைக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. அது ஜனநாயகம் அல்ல யதேச்சதிகாரம் என்பதை மக்கள் பல முறை பாசிஸ்டுகளுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். இவர்களும் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை!

Also Read: ஹமீது அன்சாரியை பிரதமர் மோடி கேலி செய்ததை மறந்து விட்டீர்களா?: பா.ஜ.கவுக்கு நினைவூட்டிய ஜெய்ராம் ரமேஷ்!