Politics

நாடாளுமன்ற தாக்குதல் விவகாரம் : "மக்களவை சபாநாயகரின் கூற்று அருவறுக்கத்தக்கது"- சு.வெங்கடேசன் MP காட்டம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 13-ம் தேதி நடைபெற்று கொண்டிருந்து . அப்போது திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகிய 2 நபர்கள் அரங்கிற்குள் சட்டென்று குதித்தனர்.அவர்கள் கோஷமிட்டுக்கொண்டே, தாங்கள் கொண்டு வந்த புகை குண்டுகளையும் வெடிக்க செய்தனர்.

இதனால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அந்த நபர்களை அங்கிருந்த சில எம்.பிக்கள் துரத்தி பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரிக்கையில், 5 பேர் சேர்ந்து இந்த திட்டத்தில் ஈடுபட்டதும்,இந்த தாக்குதலுக்கு 18 மாதங்களாக அந்த கும்பல் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் 5 பேர் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய இந்த நபர்களுக்கு கர்நாடக பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவே பாஸ் வழங்கியதும் விசாரணையில் வெளிவந்தது. பின்னர் 14-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல் குறித்து விவாதம் செய்யவும், உள்துறை அமித்ஷா பதவி விலகவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

ஆனால், அப்படி முழக்கம் எழுப்பிய 15 எதிர்க்கட்சி எம்.பி-க்களை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அவரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்தது குறித்து சபாநாயகர் எம்.பி-களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், சபாநாயகர் எழுதிய கடிதத்தில் இருக்கும் கூற்று அருவருக்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "நீங்கள் எழுதிய கடிதத்தின் மூலம் எம். பிகள் நடத்திய போராட்டத்தின் நோக்கத்தை மறைக்க முயல்வது அபத்தமானது. 13ஆம் தேதி நிகழ்வு குறித்து உள்துறை அமைச்சர் அவைக்கு விளக்க வேண்டும் என்று கேட்டோம். உள்துறை அமைச்சர் ஊடகச் சந்திப்பில் இது குறித்து பேசுகிறார். ஆனால் நாடாளுமன்றத்தில் பேசத் தயாராக இல்லை. இந்த அரசு நாடாளுமன்றத்தை மதிக்கும்விதம் இதுதானா? நீங்கள் நாடாளுமன்றத்தில் அவர் பேசுவதற்கான அழுத்தத்தை தந்திருக்கலாம்.

அவையின் புனித்தை நிலைநிறுத்த இடைநீக்கம் செய்ததாக சபாநாயகர் கூறியிருப்பது அருவருக்கத்தக்க கூற்று. புனிதத்தைக் காக்க போடப்பட்ட சாம்பிராணிப்புகைதான் அந்த மஞ்சள்வண்ணப்புகையா? புனிதத்தைக்காக்க பாஸ் கொடுத்தவரை இனி புனிதர் என்று அழைக்கத் தீர்மானம் கொண்டுவரலாமா? உங்களின் விசுவாசம் உண்மைக்கு எதிரானதாக அம்பலப்பட்டு நிற்கிறது" என்று விமர்சித்துள்ளார்.