Politics

மக்களின் ஒரு சொட்டு கண்ணீரை துடைத்துவிட்டு அரசை விமர்சியுங்கள் - அதிமுகவை விமர்சித்த அமைச்சர் மா.சு !

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சர், அமைச்சர்கள், மேயர் என அனைவரும் களத்தில் இரண்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள், மீட்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அதே நேரம் சிலர் பாதிக்கப்பட்ட இடத்துக்கே வராமல் அரசை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசை விமர்சிப்பவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் ஒரு சொட்டு கண்ணீரை யாவது துடைத்துவிட்டு அரசை விமர்சிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர் " மிக்ஜாம் பெயரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் செய்து வருகின்றோம். மருத்துவத்துறை சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களிலுமே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு இந்த மருத்துவ முகாம் தொடர்ச்சியாக நடைபெறும். நாளை 3000 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட உள்ளது

கடந்த காலங்களை ஒப்பிடுகையில் மழை வெள்ளநீர் மிக விரைவாக வடிந்துள்ளது. விளம்பரம் தேட வேண்டும் என்பதற்காக அதிமுகவினர் பணம் கொடுத்து சிலரை தயார் செய்து மக்கள் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வருகை தரும் பொழுது பிரச்சினை ஏற்படுத்துவது போல் வீடியோ எடுத்து அதை பத்திரிகைகளுக்கு கொடுக்கின்றனர். அரசின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவர்கள் விசம பிரச்சாரத்தை செய்கின்றனர். அவர்கள் எங்கள் மீது விமர்சனம் செய்வதை நாங்கள் சந்தோஷமாக வரவேற்கின்றோம். அதே வேளையில் அரசை விமர்சிப்பவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் ஒரு சொட்டு கண்ணீரை யாவது துடைத்துவிட்டு அரசை விமர்சிக்க வேண்டும்" என்று கூறினார்.