Politics

புயல் பாதிப்பிலிருந்து மீளாத சென்னை : இரக்கமே இல்லாமல் தேர்வுகளை ஒத்திவைக்காமல் நடத்தும் ஒன்றிய அரசு !

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் நேற்று முன்தினம் இரவிலிருந்து அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறனர்.

மேலும் வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர். இந்த மீட்புப் பணிகள் நேற்று காலையிலிருந்து இரவு முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மடிப்பாக்கம், முடிச்சூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையிலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த யூ.ஜி.சி - நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படாமல் பல இடங்களில் நடத்தப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசியர் மற்றும் இளநிலை ஆய்வு முனைவருக்கான படிப்புகளுக்கு நடத்தப்படும் நெட் தேர்வினை ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானிய குழு நடத்துகிறது. இந்திய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வானது 06.12.2023 முதல் 22.12.2023 வரை கணினி வழி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் சென்னையில் பல இடங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையில் மட்டும் இந்த தேர்வு ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் எந்த மாற்றமும் இன்றி சென்னையின் பல்வேறு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்படுவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பதிவிட்டுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஒன்றிய அரசின் உயர் கல்வித்துறை யூ ஜி சி - நெட் தேர்வுகளை இன்று சென்னையில் பல மையங்களில் நடத்துகிறது.மிக்ஜாம் புயலின் பாதிப்புகளில் இருந்து சென்னை இன்னும் மீளவில்லை என்பதை ஒன்றிய கல்வித்துறை அறியாதா? தேர்வுத் தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்"என்று கூறியுள்ளார்.

Also Read: பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என்பது ஒன்றே இலக்காக இருக்க வேண்டும்: தேர்தல் முடிவும் படிப்பினைகளும்- முரசொலி!