Politics

ராணுவ வீரர்கள் மரணமடைந்த தருணத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் - ஒவைசி விமர்சனம் !

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தர்மசாலில் பாஜி மால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ், ராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் அங்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் தீவிரவாதிகள் தாக்குதலில் 4 ராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததால் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தொடர்பான வன்முறையில் இந்த ஆண்டும் 81 தீவிரவாதிகள் மற்றும் 26 பாதுகாப்புப் படையினர் உட்பட 120 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் ராணுவத்தினர் வீரமரணம் அடைந்த நிலையில், பிரதமர் மோடி பெங்களுருவில் தேஜஸ் விமானத்தில் உற்சாகமாக பயணம் செய்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், AIMIM கட்சி தலைவர் அசாவுதீன் ஒவைசி பிரதமரின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளது.

இது குறித்துப் பேசிய அவர், "ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் நமது 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த தருணத்தில், பிரதமர் மோடி பெங்களூரில் தேஜஸ் விமானத்தில் மகிழ்ச்சியாக சவாரி செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டிய நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெலங்கானாவில் பாஜகவுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுகொண்டிருக்கிறார். இது நாட்டின் தலைவர்கள் பொறுப்பில்லாமல் இருப்பதை காட்டுகிறது" என்று விமர்சித்துள்ளார்.

Also Read: அடுத்த ஆண்டும் IPL-ல் களம்காணும் தல தோனி: CSK தக்கவைத்த,விடுவித்த வீரர்கள் யார் யார் ? முழு விவரம் உள்ளே!