Politics

“இந்த மிரட்டல்லாம் இங்க பலிக்காது” -ராஜஸ்தான் முதல்வர் மகனுக்கு நோட்டீஸ் அனுப்பிய EDக்கு குவியும் கண்டனம்

இந்தியாவில் பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து தொல்லை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ள ஒன்றிய பாஜக தற்போது சற்று மாற்றி, அமலாக்கத்துறையை வைத்து அச்சுறுத்த முயற்சிக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் இருக்கும் ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வீட்டில் அமலாக்கத்துறை திடீரென ரெய்டு நடத்துகிறது.

இவ்வாறு தொடர்ந்து செயல்பட்டு வரும் அமலாக்கத்துறைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கும் எதிர்க்கட்சிகள் வலுத்த கண்டனங்கள் தெரிவித்து வருகிறது. தொடர்ந்து இவ்வாறு அச்சுறுத்தி அவர்களிடம் பேரம்பேசி பாஜகவில் இணைய வற்புறுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் மாநில முதலமைச்சரின் மகனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் (நவம்பர்) இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில் பாஜக அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சியை அச்சுறுத்த முயற்சிக்கிறது. அதன்படி இன்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏ-விமான கோவிந்த் சிங் தோடஸரா (Govind Singh Dotasra) வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.

மேலும் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டுக்கு அமலாக்கத் துறை சம்மனும் அனுப்பியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முந்தைய குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து தற்போது வைபவ் கெலாட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்ட்டுள்ளது தற்போது அனைவர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

வைபவ் கெலாட்

இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் கூறுகையில், "எனக்கு அமலாக்கத்துறையிடமிருந்து சம்மன் வந்துள்ளது. 12 - 13 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு நாங்கள் பதிலளித்து விட்டோம். தற்போது மீண்டும், அமலாக்கத்துறை வந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது இது ஏன் நடக்கிறதென ராஜஸ்தான் மக்களுக்கு புரியும்.” என்று தெரிவித்துள்ளார்.

சச்சின் பைலட்

மேலும் ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், "எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து துன்புறுத்தவும், மிரட்டவும், அரசு நிறுவனங்களை ஆயுதமாக பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறது பாஜக. 12 ஆண்டுகளுக்கு முன் உள்ள வழக்கை தேர்தலுக்கு முன்னதாக எடுத்து வருவதை பார்க்கும்பொழுது இந்திய அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவருகிறது. 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மிரட்டல், தந்திரங்கள் எல்லாம் பலிக்காது." என்றார்.

தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்படப் போகும் உறுதியான தோல்வியைப் பார்த்து பாரதிய ஜனதா கட்சி தனது கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை ராஜஸ்தானிலும் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மோடி அரசின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு எதிரானது." என்றார்.

Also Read: புல்வாமா தாக்குதல்: தேர்தலுக்காக டிராமா நடத்தினர் - மோடி அரசு மீது முன்னாள் ஆளுநர் பகிரங்க குற்றச்சாட்டு!