Politics

“இப்போ உங்க கூட CBI, ED, IT மட்டும் தான் இருக்காங்க..” - மோடியை கடுமையாக சாடிய கே.டி.ராமாராவ் !

தெலங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான பாரதிய ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகிறது. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் பிரதமர் மோடிக்கும், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கும் கடுமையான மோதல் போக்கு நிலவியுள்ளது.

கடந்த 1-ம் தேதி பிரதமர் மோடி தெலங்கானா சென்றார். பல்வேறு நலத்திட்ட செயல்களை துவங்க சென்ற மோடிக்கும், அம்மாநில மக்கள் போஸ்டர் ஒட்டி தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் அம்மாநிலத்தில் மோடி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் பேனர்கள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக, தெலங்கானா சென்ற மோடிக்கு, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நேரில் சென்று வரவேற்பு அளிக்கவில்லை. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தெலங்கானாவில் மோடி பேசியது, அம்மாநில ஆளுங்கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதாவது, ஐதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றிபெற்றபோது, மாநில முதலமைச்சர் கே.சி.ஆர் டெல்லியில் தன்னை சந்தித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விரும்புவதாகக் கூறியதாகவும், கூடவே, அனக்கும் ஆதரவளிக்குமாறு கேட்டதாகவும், ஆனால், தான் உங்களுடன் இணைய விருப்பப்படவில்லை என்று அவரிடமே கூறியதாகவும் மோடி பேசினார். இது அக்கட்சியினரிடையே பெரும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி பேசியதற்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகனும், மாநில முதலமைச்சருமான கே.டி.ராமாராவ் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், " “பிரதமர் மோடி மிகப்பெரிய நடிகர். அவரின் நடிப்புக்கும், திரைக் கதைக்கும் ஆஸ்கர் விருதே வழங்கலாம். NDA கூட்டணியில் சேரும் அளவுக்கு பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி ஒன்றும் பைத்தியகார கட்சி அல்ல.

இப்போது சிவ சேனா, ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட பல கட்சிகள் பாஜகவில் இருந்து விலகியுள்ளது. இப்போது உங்களுடன் CBI, ED, IT தவிர யார் உள்ளார்கள்? 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 105 சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க டெபாசிட் இழந்தது, இந்த முறை அது 110-ஆக உயரும் ” என்றார்.

Also Read: “FIR நகல் கூட இல்லை.. எதுக்கு UAPA வழக்கு?” - ஒன்றிய பாஜக அரசுக்கு NEWSCLICK ஊடகம் சரமாரி கேள்வி !