Politics
“அதிமுக மட்டுமல்ல, இன்னும் சில கட்சிகளும் பாஜக கூட்டணியை முறித்து கொள்ளும்.. ” - சிவசேனா எம்.பி தாக்கு !
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்த சூழலை தமிழ்நாடு அரசியலில் திருப்பு முனையாக அதிமுக தனது கூட்டணி கட்சியான பாஜவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி மாட்டிக்கொள்வது வழக்கம்.
ஆளுங்கட்சியை விமர்சிப்பது மட்டுமின்றி, கூட்டணி கட்சியையும் விமர்சித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அடிக்கடி அதிமுகவை விமர்சித்து சர்ச்சையில் சிக்கி வரும் இவருக்கு, அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பாஜவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.
எனினும் சில நாட்களில் "எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை.. கூட்டணி சுமூகமாக செல்கிறது.." என்றும் அறிவிப்பை வெளியிட்டனர். உட்கட்சி பஞ்சாயத்து போல் அதிமுக - பாஜக கூட்டணி கட்சி சண்டைகள் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகளும், இணையவாசிகளும் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அண்ணாமலை தனது வாயை கட்டுப்படுத்தாமல் தொடர்ந்து கூட்டணி கட்சியான அதிமுகவை விமர்சித்து வந்தார்.
இந்த சூழலில் அண்மையில் பேரறிஞர் அண்ணா குறித்து தவறான செய்தியை சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கியுள்ளார் அண்ணாமலை. இவரது பேச்சுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து அதிமுக தலைவர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு உள்ளிட்டோரின் கண்டனங்களுக்கு அண்ணாமலை திருப்பி பதிலடி கொடுப்பதாக கூறி திமிராக பேசினார்.
இது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக கடந்த 4 நாட்களுக்கு முன்னாள் அதிமுக முக்கிய நிர்வாகி ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டத்தை அதிமுக முறித்துக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில், சிவசேனா கட்சி எம்.பி., சஞ்சய் ராவத், அதிமுக போல், மேலும் சில கட்சிகள் பாஜக கூட்டணியை விரைவில் முறித்து கொள்ளும் என்றார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "நாங்கள் 'INDIA' கூட்டணியை அமைத்தபோது, பாஜகவுக்கு NDA (தேசிய ஜனநாயக கூட்டணி) நினைவுக்கு வந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மோடி ஒருவரே போதும் என்று நினைத்தார். ஆனால் 'இந்தியா' கூட்டணி உருவானபோது அவர்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் தற்போது இல்லை. இந்த இரு கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உண்மையான பலமான கட்சிகளாக இருந்தன. ஆனால் தற்போது இருக்கும் பாஜக கூட்டணி பலவீனமாக உள்ளது. அதிமுக மட்டுமல்ல, மேலும் பல கட்சிகளும் பாஜகவுடனான கூட்டணியை விரைவில் முறித்துக் கொள்ளும். 2024 ஆம் ஆண்டுக்குள் பாஜக மூழ்கிவிடும்" என்றார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !