Politics
மகளிர் இடஒதுக்கீடு மசோதா : “ஒன்றிய அரசு கூறுவது மிகப்பெரிய துரோகம்..” - செல்வப்பெருந்தகை கண்டனம் !
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி (நாளை) வரை நடைபெறவுள்ளது. தற்போது புதிய நாடாளுமன்றத்தில் இந்த கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய முந்தினம் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று மக்களவையில் 454 பேர் ஆதரவோடு நிறைவேறியது.
எனினும் இந்த மசோதா அரசியல் ஆதாயத்தை தேடும் நோக்கத்தோடு பாஜக அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. இதில் இருக்கும் சில சிக்கல்களால் இந்த மசோதா அமல்படுத்துவது சாத்தியமல்ல என்றும் கூறி வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, இந்த மசோதா ஒன்றிய அரசின் ஏமாற்று வேலை என்று அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :
“பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நேற்று 20.09.2023 அன்று வாக்கெடுப்புடன் நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது 9.3.2010 அன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றியது. பின்னர், மசோதாவை அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை.
தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதாவில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு 15 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்றும், பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இடஒக்கீட்டில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடும் அடங்கியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண்களுக்கான இட ஒத்துக்கீடு இல்லாமல் இருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நாட்டின் மக்கள் தொகையில் அதிக அளவில் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டோர் (Other Backward Classes-OBC) பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யாமல் இருப்பதிலேயே அந்தப் பிரிவு பெண்களின் முன்னேற்றத்தில் துளியும் அக்கறையில்லாமல் இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு என்பது தெளிவாகிறது. ஒ.பி.சி. பிரிவு மக்களை வேண்டுமேன்றே பலிவாங்குகிறது, ஏமாற்றுகிறது பா.ஜ.க. அரசு.
பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கொண்டு வர பெரிய அளவில் முயற்சி செய்தவர் முன்னாள் பிரதமர், பாரத ரத்னா ராஜிவ்காந்தி. ஆனால், அந்த மசோதா மாநிலங்களவையில் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதன் பிறகு முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில்தான் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், இன்று நாட்டில் 15 லட்சத்திற்கும் அதிகமான தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வரும் தேதி குறித்த தெளிவு இல்லாமல் உள்ளது, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே மசோதா அமலாகும் என ஒன்றிய அரசு கூறுவது மிகப்பெரிய துரோகம் ஆகும். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பையே இன்னும் ஒன்றிய அரசு நடத்தவில்லை, ஜி20 கூட்டமைப்பு நாடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளத் தவறிய நாடு இந்தியா மட்டுமே.
எனவே, மக்கள் தொகைக்கு ஏற்ப உரிமைகள் என்ற அடிப்படையில் உடனடியாக சாதிவாரியாக மக்கள் தொகைக்கணக்கு எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டின் மக்கள் தொகையில் அனைத்து வகுப்பினரின் உண்மையான கணக்கீடு தெரியவரும்.
எந்தவொரு சமூக நீதிப் பணியைத் தொடங்குவதற்கான முதல்படி பிரச்சினையின் அளவைப் புரிந்து கொள்வது ஆகும். அதனால்தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் மட்டுமே, மக்கள்தொகையில் சாதிவாரியான மக்களின் வருமானம், கல்வி, சுகாதாரம் மற்றும் பல்வேறு பிரிவினர்களின் சமூக நகர்வு பற்றிய சரியான விவரங்களைப் பெற முடியும். எனவே, உடனடியாக சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கு எடுக்கப்பட வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!