Politics

பணத்தில் சாதி பார்க்கவில்லை... இதில் சாதி பார்க்கிறீர்களா ? -அர்ச்சகரின் செயலை விமர்சித்த கேரள அமைச்சர் !

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக சாதிய பாகுபாடு நிலவி வருகிறது. இதன் காரணமாகி சமூகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் பட்டியலின,பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். பொது இடத்தில நடக்க, நீர் அருந்த, படிக்க, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யகூட சாதியின் பேரில் இங்கு தடை இருந்தது.

இதனைப் போன்ற சாதிய பாகுபாடுகளை குறிப்பிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமுஎகச சார்பில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்துக்கு எதிராக பேசியிருப்பார். ஆனால் இதனை பாஜக கும்பல் திரித்து பொய் செய்தி பரப்பி வந்தது. இதையடுத்து பொய் செய்தி பரப்பி வந்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்தது.

ஆனால், இந்த சம்பவத்துக்கு பின்னர் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் நாட்டில் 2000 ஆண்டுகளாக சாதிய பாகுபாடு இருக்கிறது என கூறி ஆங்கிலேயர் வந்த பின்னரே சாதி உருவானது என பாஜகவினர் சனாதனம் குறித்துபரப்பி வந்த பொய்க்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில், சனாதனம் காரணமாக அமைச்சர் ஒருவருக்கே அவமதிப்பு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும், அறநிலையத்துறை அமைச்சராகவும் இருப்பவர் கே.ராதாகிருஷ்ணன். இவர் ரளாவின் பையனூர் கோயிலில் நடைபெற்ற நடைபந்தல் திறப்பு விழாவுக்கு சென்றுள்ளார்.

அங்கு, விழாவைத் தொடங்கிவைக்கும் வண்ணமாக, மேடையில் விளக்கு ஏற்றுவதற்கு அர்ச்சகர் ஒருவர் தீபத்தை எடுத்து வந்துள்ளார். ஆனால், அந்த விளக்கை அவரே ஏற்றி பின்னர் சக அர்ச்சகரிடமும் கொடுக்க அவர்களும் விளக்கு ஏற்றியுள்ளனர்.அதன் பின்னர் அந்த தீபத்தை அமைச்சரின் கரங்களில் கொடுக்காமல் அவரின் முன்னர் வைத்து சென்றுள்ளனர்.

இந்த தீண்டாமை செயலால் கடும் அதிர்ச்சியடைந்த அமைச்சர், அந்த விளக்கை ஏற்ற மறுத்து, பல்வேறு சாதியைச் சேர்ந்த மக்கள் கொடுக்கும் காணிக்கைகளை நீங்கள் எந்த தயக்கமும் இன்றி வாங்குகிறீர்கள். இருந்தாலும், குறிப்பிட்ட சமூக மக்களிடம் இன்னும்கூட சாதிய பாகுபாட்டுடன்தான் அணுகுகிறீர்கள் என மேடையிலே அர்ச்சகர்களை விமர்சித்துள்ளார். இந்த சம்பவத்தை அவர் தற்போது ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கூற இந்த தீண்டாமை சம்பவம் வெளிவந்துள்ளது.

Also Read: இதற்காகவே நாம் பிரதமர் மோடியை பாராட்டத்தான் வேண்டும்.. முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?