Politics

பூஜ்ஜியமாக குறைக்கப்பட்ட நீட் தேர்வு தகுதி மதிப்பெண்.. கலந்தாய்வுக் குழு அறிவிப்பின் பின்னணி என்ன ?

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

நீட் தேர்வு அமலுக்கு வந்ததில் இருந்து , தனியார் பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் பயிற்சி மையங்கள் லட்ச கணக்கில் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. இதன் மூலம் நீட் தேர்வு தனியார் பயிற்சி மையங்களுக்காக கொண்டுவரப்பட்டது என பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது நீட் தேர்வில் நடக்கும் அவலத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. நாடுமுழுவதும் எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் ஆகிய மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மார்ச் 5-ம் தேதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 27-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில், தற்போது வரை 3 சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. ஆனால், நாட்டின் பல்வேறு தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஏராளமான மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதால், நீட் தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் காரணமாக , காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே நீட் தேர்வால் மாணவர்களின் திறனை மேம்படுத்த முடியாது எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது அதனை உறுதிசெய்யும் விதமாக வெளியான இந்த அறிவிப்பை பலரும் விமர்சித்து வருகின்றனர்.