Politics

ISRO-வின் திட்டங்களுக்கு உதவிய அரசு ஊழியர்கள்.. 18 மாதமாக ஊதியம் வழங்காததால் கூலி வேலை செய்யும் சோகம் !

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அதனைத் தொடர்ந்து 'சந்திரயான் 2' , 'சந்திரயான் 3 ' ஆகிய விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது இஸ்ரோ. அதில் 'சந்திரயான் 3 ' விண்கலத்தின் லேண்டர் நிலவில் இறங்கி சாதனை படைத்தது. இந்த சாதனையைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியுள்ளார்.

இப்படி சந்திரயான், ஆதித்யா எல்1 போன்ற விண்கலங்களை இஸ்ரோ அனுப்புவதற்கு முக்கிய காரணமாக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (HEC) நிறுவனம் திகழ்ந்து வருகிறது.

சந்திராயன் உள்ளிட்ட இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களுக்கு ஏவுகளம் அமைத்து, கனரக இயந்திரங்களை உற்பத்தி செய்துகொடுத்தது இந்த HEC நிறுவனம்தான். ஆனால், இந்த நிறுவனத்தில் பணிபுரியும் 2,800 ஊழியர்களுக்கு 18 மாதங்களாக ஒன்றிய அரசு ஊதியம் வழங்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இதன் காரணமாக அங்கு வேலை செய்துவந்த பலர் டீ கடை வைப்பது, உணவகம் நடத்துவது போன்ற பல்வேறு வேலைகளை செய்து, தங்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். அதே நேரம் இந்த நிறுவனத்தை மோடி அரசு தனியாருக்கு விற்பனை செய்ய விரும்புவதால்தான் இது போன்ற நிலையில் நிறுவனத்தை வைத்துள்ளது என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

Also Read: கோட்டா : தொடர்ந்து பலிவாங்கும் நீட்.. தனியார் பயிற்சி மையத்தில் படித்துவந்த 16 மாணவி தற்கொலை !