Politics
"தமிழர்கள் இந்தியை கற்க வேண்டும், சமஸ்கிருதத்தில் மட்டுமே அறிவு இருக்கிறது" - குஜராத்தில் அமித்ஷா பேச்சு!
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.இது தவிர ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தியைப் பயன்படுத்தச் சொல்வது, அலுவல் பூர்வக்கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு தென்மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் டெல்லியில் அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, "எந்தவித எதிர்ப்பும் இன்றி அலுவல் மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ளுவதற்கான தேவையை உருவாக்க வேண்டும். இந்தியை ஏற்பதில் தயக்கம் இருந்தாலும் இறுதியில் எந்த எதிர்ப்புமின்றி இந்தி ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்" என்று கூறியிருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். எனினும் எதையும் காதில் வாங்கமாட்டோம் என தற்போது மீண்டும் இந்தியை அனைவரும் கற்க வேண்டும் என அமித்ஷா கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, "ஆங்கில மொழியுடன் ஜெர்மன், பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளை குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். அதேபோல குஜராத்திகள் குஜராத்தி மொழியுடன் இந்தியை கற்க வேண்டும். அஸ்ஸாமியர்கள், அஸ்ஸாமி மொழியுடன் இந்தியை கற்க வேண்டும்; தமிழர்கள், தமிழ் மொழியுடன் இந்தியையும் கற்க வேண்டும். அப்படி நடந்தால் நமது நாட்டின் வளர்ச்சியை எவராலும் தடுத்துவிட முடியாது.
உபநிடதங்கள், வேதங்கள், சமஸ்கிருதத்தில் மட்டுமே உலகம் முழுவதற்குமான அறிவுகளஞ்சியம் இருக்கிறது. ஆகையால் இதனை கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி கற்றுக்கொண்டால் வாழ்க்கையின் எந்தப் பிரச்சனையும் உங்களுக்குப் பிரச்சனையாக இருக்காது" என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!