Politics
நாடாளுமன்றத்திற்குள் மீண்டும் எம்.பியாக ராகுல் காந்தி: தகுதி நீக்க உத்தரவை வாபஸ் பெற்றது மக்களவை செயலகம்!
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கர்நாடகாவில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது "மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லோரும் திருடர்களாக இருக்கிறார்கள்" என கூறியிருந்தார்.இதையடுத்து மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்ததாகக் கூறி பா.ஜ.க நிர்வாகி புர்னேஷ் மோடி வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து உடனே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கவும் மறுத்து விட்டது.
இதையடுத்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அதற்கான தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டு சிறை தண்டடைக்கு நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர். இந்த தீர்ப்பைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீதான தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் மக்களவை சபாநாயகரிடம் கடிதம் மூலமாகவும், நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீதான தகுதி நீக்க உத்தரவை வாபஸ் பெற்று மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. மேலும் அவர் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராகவும் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி மாறியுள்ளார்.
மக்களவை செயலகத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து மும்பையில் கூடியுள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள் இனிப்பு வழங்கி இந்த மகிழ்ச்சியை கொண்டாடினர். அதோடு இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், அதில் ராகுல் காந்தி கலந்துகொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!