Politics

“காய்கறிகளின் விலை உயர்வுக்கு முஸ்லிம்களே காரணம்” : பாஜக முதல்வர் சர்ச்சை பேச்சு - குவியும் கண்டனம் !

பருவமழை காரணமாக இந்தியா முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் ரூ.200க்குக் கூட தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

இப்படி கடுமையாகத் தக்காளி விலை உயர்ந்துள்ளது ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தக்காளி விலையை தொடர்ந்து வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த இது வரை எந்த நடவடிக்கையையும் ஒன்றிய அரசு எடுத்ததாக செய்திகள் வெளியாகவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், காய்கறிகளின் விலை உயர்வுக்கு முஸ்லிம்களே காரணம் என அசாம் பாஜக முதல்வர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்கறிகளின் விலை உயர்வு குறித்து பேசிய அசாம் முதல்வர்

ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, "கிராமப்புறங்களில் காய்கறி விலை குறைவாக உள்ளது. ஆனால் நகர பகுதிகளில் காய்கறி விலை அதிகமாக இருக்கிறது. இதற்கு காய்கறிகளை விலைக்கு வாங்கி விற்பனை செய்யும் முஸ்லீம் வியாபாரிகள் காரணம். முஸ்லீம் வியாபாரிகள் அதிக விலை வைப்பதால் விலைவாசி உயர்ந்து விட்டது" எனக் கூறியுள்ளார்.

அவரின் இந்த முட்டாள்தனமான கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்துவரும் நிலையில், உங்கள் வீட்டில் மாடு பால் கறக்காவிட்டாலும், கோழி முட்டையிடா விட்டாலும் அதற்கும் இஸ்லாமியர்கள் தான் காரணமா என Aimim கட்சித் தலைவர் அசதுதீன் உவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: ”பா.ஜ.கவின் கோழைத்தனமான நடவடிக்கை”.. அமலாக்கத்துறை சோதனைக்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்!