Politics

அரசை விமர்சிக்கும் கணக்குகளை முடக்காவிட்டால் ரெய்டு நடக்கும் -Twitter நிறுவனத்தை மிரட்டிய ஒன்றிய அரசு !

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டதை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 2020ம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இந்தியாவை ஸ்தம்பிக்க வைத்தது. அதிலும் டெல்லி எல்லையான சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் பகுதியில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்தனர்.

டிரக்டர் பேரணி, சக்கா ஜாம், சாலை மறியல் என பல கட்ட போராட்டங்களை நடத்தியும் இவர்களின் நியாயமான கோரிக்கையை தொடர்ந்து ஒன்றிய அரசு புறக்கணித்து ஏமாற்றி வந்தது. மேலும் இவ்ர்கள் மீது அவதூறு பரப்ப பாஜக ஆதரவாளர்கள் ஏராளமான முயற்சிகளையும் மேற்கொண்டனர். இறுதியில் தொடர் போராட்டங்களின் விளைவாக ஒன்றிய அரசு பணிந்து வேளாண் சட்டதை திரும்பப் பெற்றது.

அதே நேரம் மோடியின் 9 ஆண்டு ஆட்சியின் கொடுமைகளை விமர்சித்த ஏராளமான பத்திரிகையாளர்களை பாஜக அரசு தொடர்ந்து மிரட்டி வந்தது. அதில் உச்சக்கட்டமாக பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டார். மேலும் சில பத்திரிகையாளர்களை ஒன்றிய அரசு சிறையில் அடைத்த கொடூரமும் நிகழ்ந்தது.

இந்த நிலையில், விவசாயிகள் போராட்டச் செய்திகள் அளித்த கணக்குகளை முடக்கவும், அரசாங்கத்தை விமர்சிக்கும் கணக்குகளையும் முடக்கும்படி இந்திய அரசாங்கம் கேட்டது என்ற அதிர்ச்சி தகவலை ட்விட்டர் சமூகதளத்தின் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குநர் ஜேக் டார்சி வெளியிட்டுள்ளார்,

நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் 2020-21 விவசாயிகள் போராட்டச் செய்திகள் அளித்த கணக்குகளை முடக்க பல கோரிக்கைகள் இந்திய அரசிடமிருந்து வந்தன என்றும், அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களின் கணக்குகளையும் முடக்கும்படி இந்திய அரசாங்கம் கேட்டது என்றும் கூறியுள்ளார். மேலும், அப்படி அந்த கணக்குகளை முடக்கவில்லை எனில் பெரும் சந்தையான இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தை இழுத்து மூடுவோம் என்றும் ட்விட்டர் ஊழியர்கள் வீடுகளில் ரெய்டு நடத்துவோம் என்றும் இந்திய அரசு மிரட்டல் விடுத்தது என்றும் கூறியுள்ளார். அதோடு அவர்கள் கூறியபடி ரெய்டு நடத்த பட்டது என்றும், ஜனநாயக நாடான இந்தியாவில் இப்படி நடக்கிறது என்றும் வேதனையோடு தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஒற்றை செங்கலோடு எய்ம்ஸ்.. எந்த தைரியத்தில் இவர்கள் இங்குவந்து மேடை போட்டு பேசுகிறார்கள்? -முரசொலி கேள்வி!