Politics

மல்யுத்த வீரர்கள் போராட்டம்.. ஆதரவாக திரளும் விவசாயிகள், பொதுமக்கள்.. ஹரியானா பாஜக அரசுக்கு சிக்கல் !

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாகத் திரும்பப்பெற்றனர்.பின்னர் விசாரணைக் குழு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து ஒரு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி கொடுக்காமல் இருந்து வருகிறது.

அதன்பின்னர் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற திறக்கப்பட்ட நிலையில், அதனை அதனை முற்றுகையிட்டு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த போலிஸார் மல்யுத்த வீரர்களை தடுத்து தரதரவென இழுத்து சென்று கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டுக்காக தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் தூக்கி வீசுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர். அதன்படி தங்கள் வென்ற பதக்கங்களுடன் கங்கை நதியில் வீசக்கொண்டு சென்றபோது அங்கு இருந்த போலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் மல்யுத்த வீரர்களுடன் போராட்டம் நடத்திய விவசாய சங்க தலைவர்களும் அவர்களின் இந்த முடிவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதன்பின்னர் பதக்கங்களை ஆற்றில் வீசும் போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் கைவிட்டு பிரிஜ்பூஷனை 5 நாட்களில் கைது செய்யவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என மல்லியுத்த வீராங்கனைகள் கெடு விதித்தனர். இதனிடையே மல்யுத்த வீரர்களின் போராட்டம் காரணமாக ஹரியானா பாஜக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஹரியானாவில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருந்து வரும் நிலையில், அங்கு மல்யுத்தம் என்பது மிகப்பெரும் கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது. தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு மல்யுத்த வீரர்கள் ஹரியானாவை சேர்ந்தவர்களே. இதன் காரணமாக இந்த விவகாரம் ஹரியானாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவை சேர்ந்த விவசாய சங்கங்களும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும் மல்யுத்தத்தை உணர்வு பூர்வமாக கருதும் ஹரியானா பொதுமக்களுக்கும் இந்த விவகாரத்தால் பாஜக மேல் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதோடு ஹரியானா பாஜகவிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளதாகவும், மாநில பாஜகவினர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரி வருவதும் செய்திகள் மூலம் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பாஜக அரசி விரைவில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு பணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: உலகளவில் 19 ஆண்டுகளில் இல்லாத கொடூரம்.. 288 பேரை பலிவாங்கிய ஒடிசா ரயில் விபத்து - முழு விவரம் என்ன ?