Politics

"அவதூறு வழக்கில் MP பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட முதல் நபர் நான்தான்" -ராகுல் காந்தி உருக்கம்!

இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் , கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "நிரவ் மோடி, லலித் மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள்" என பேசினார்.

இதையடுத்து மோடி என்ற குடும்ப பெயர் வைத்துள்ளவர்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார் என கூறி குஜராத் முன்னாள் பாஜக அமைச்சர் புர்னேஷ் மோடி என்பவர் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டை விதித்து சூரத் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அனுமதியும் ரூ. 15,000 பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெறவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதையடுத்து சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி கடந்த மாதம் (மார்ச்) 24-ம் தேதி ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கைக்குக் காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம்., உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து தற்போது ராகுல் காந்தி ஆறு நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது கலிஃபோர்னியாவின் சான்டா கிளாராவில் இந்திய புலம்பெயர்ந்தோர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், "பிரதமர் மோடி உலகத்தைப் பற்றித் தனக்கு எல்லாம் தெரியும் என நினைக்கிறார். அவர் கடவுளுக்கு கூட பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்குவார்" என்று விமர்சித்திருந்தார். மேலும், "தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல கலாச்சாரம்,வரலாறு என்பதையும் தாண்டி, வாழ்வியல் முறையாகும். தமிழ் மொழியை அச்சுறுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அதிகபட்ச தண்டனையாக எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட முதல் நபர் நான்தான். இப்படிப் பேசியதற்காக தகுதிநீக்கம் செய்யப்படுவேன் என நான் கற்பனைகூடச் செய்யவில்லை. என் தகுதிநீக்கத்துக்கான இந்த நாடகம் உண்மையில் நான் ஜோடோ யாத்திரை சென்ற ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Also Read: பிரிஜ் பூஷனை கைது செய்யாதது ஏன்? பாஜக MP என்பதால் அவருக்குச் சலுகை காட்டுகிறீர்களா? முரசொலி விமர்சனம் !