Politics

39 கிரிமினல் வழக்கு, மகன் தற்கொலைக்கு காரணம்- பாஜக பொத்தி பாதுகாக்கும் பிரிஜ் பூஷனின் அதிர்ச்சி பின்னணி ?

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதனால் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாகத் திரும்பப்பெற்றனர். ஆனால் விசாரணைக் குழு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து ஒரு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற திறக்கப்பட்ட நிலையில், அதனை அதனை முற்றுகையிட்டு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த போலிஸார் மல்யுத்த வீரர்களை தடுத்து தரதரவென இழுத்து சென்று கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டுக்காக தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் தூக்கி வீசுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர். அதன்படி தங்கள் வென்ற பதக்கங்களுடன் கங்கை நதியில் வீசக்கொண்டு சென்றபோது அங்கு இருந்த போலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் மல்யுத்த வீரர்களுடன் போராட்டம் நடத்திய விவசாய சங்க தலைவர்களும் அவர்களின் இந்த முடிவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.அதன்பின்னர் பதக்கங்களை ஆற்றில் வீசும் போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் கைவிட்டு பிரிஜ்பூஷனை 5 நாட்களில் கைது செய்யவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என மல்லியுத்த வீராங்கனைகள் கெடு விதித்துள்ளனர்.

இந்த நிலையில், இதுவரை பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் மீது '38' கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 1993-ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பதவறும், பிரபல நிழல் உலக தாதாவுமான ர் தாவூத் இப்ராஹிமின் அடியாட்களுக்குச் சட்டவிரோதமாக அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு தந்ததற்காக பிரிஜ் பூஷண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும், தனது நண்பன் ரவீந்தரைச் சுட்டுக் கொன்ற நபரை நானே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன் என்று அவர் பேசிய வீடியோ வைரலான நிலையில் அவர்மேல் வழக்கு பதியப்பட்டது. இவருடைய மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் இறுதியாக எழுதிய கடிதத்தில் "என் சாவுக்குக் காரணம், என்னுடைய அப்பாதான்" எனக் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையானது.

இது தவிர இவர்மீது திருட்டு, கலவரம், கொலை, மிரட்டல், கொலை முயற்சி, ஆட் கடத்தல் போன்ற பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளின்கீழ் இதுவரை '38' கிரிமினல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவர் பாலியல் வன்கொடுமை குறித்த போக்சோ சட்டத்தைத் தடைசெய்ய வேண்டும் என கூறினார் என்பதும் இதற்காக 11 லட்சம் பேரை கொண்டு பேரணி செல்வேன் என்றும் கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய குற்றவாளியைதான் பாஜக பொத்தி பாதுகாக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "அவதூறு வழக்கில் MP பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட முதல் நபர் நான்தான்" -ராகுல் காந்தி உருக்கம்!