Politics
கர்நாடகா: இனி காவல்துறையை காவி மயமாக்க அனுமதிக்கமாட்டோம் -உயரதிகாரிகளுக்கு டி.கே சிவக்குமார் எச்சரிக்கை!
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
135 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தனர்.
காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றனர். அதனைத் தொடர்ந்து நேற்று காவல்துறை உயரதிகாரிகளின் மாநாடு முதலமைச்சர் சித்தராமையா முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் டிகே சிவக்குமார் கலந்துகொண்டு பேசிய பேச்சுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியபோது "கடந்த பாஜக ஆட்சியின் போது, மங்களூரு, பீஜாப்பூர், பாகல்கோட் ஆகிய இடங்களில் காவி உடை உடுத்தியவர்களுடன் சேர்ந்து நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.
ஆனால் இனி காவல்துறையை காவி மயப்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.மூவர்ண சுதந்திர கொடியின் கீழ் நிற்பவர்களுக்கு மட்டுமே இனி இங்கு வேலை எனத் தெரிவித்தார். கர்நாடக காவல்துறைக்கு இந்திய அளவில் இருந்த நற்பெயர் கடந்த பாஜக ஆட்சியின் போது, முற்றிலும் கெட்டுப்போய் விட்டது.எங்கு பார்த்தாலும் ஊழல் நிலவுகிறது. மக்கள் மாற்றத்தை விரும்பி இருக்கின்றார்கள். அந்த மாற்றம் காவல்துறையில் இருந்து தொடங்க வேண்டும்" என்று கறாராக கூறியுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!