Politics

காங்கிரஸ் முன்னாள் துணை முதல்வரை கல்லால் தாக்கிய பாஜக தொண்டர்கள்.. கர்நாடக அரசியலில் பரபரப்பு !

கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பாஜக சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் சில நாட்களில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இது தவிர முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கொடுக்காத நிலையில் அவர்கள் அங்கிருந்து விலகுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ள நிலையில் தற்போது அது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை அளித்து வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை முதல்வரை பாஜக தொண்டர்கள் கல்லால் தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வராக இருந்தவர் பரமேஸ்வரா. இவர் தற்போது துமகூரு மாவட்டம் கொரட்டக்கெரே சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

இவர் இன்று காலை பைரனஹள்ளி என்ற கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் இவருக்கு பெரிய மாலை அணிவிக்க முயன்றபோது அந்த பகுதியில் இருந்து பறந்துவந்து கல் ஒன்று பரமேஸ்வராவின் தலையில் பட்டுள்ளது. இதில் அவரின் தலையில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த சம்பவத்துக்கு அந்த பகுதி பாஜகவினரே காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திவருவதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

Also Read: கூடும் பலம்.. காங்கிரஸில் இணைந்த கன்னட ஸ்டார் நடிகர் சிவராஜ்குமார் மனைவி.. தம்பிக்கு ஆதரவாக பிரச்சாரம் !