Politics

ராகுலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு.. நேரில் சந்தித்து டெல்லிக்கு செய்தி சொல்லிய டி.ஆர்.பாலு !

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து எதிர்கட்சிகளை முடக்கும் நடவடிக்கையில் இறங்கி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும் முரண்டு பிடிக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் மீதும் அமலாக்க துறை, வருமானவரித்துறை போன்றவற்றை அனுப்பி மிரட்டும் போக்கை தொடர்ந்துவருகிறது.

பாஜகவின் இந்த அராஜகபோக்குக்கு எதிராக பல்வேறு எதிர்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். திமுக பலமுறை பாஜக அரசை கண்டித்து வருகிறது. தற்போதைய நிலையில், பாஜகவை உறுதியாக எதிர்த்துவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு மக்களைத் தேர்தல் நடைபெற்றபோது கர்நாடக மாநிலம் , கோலாரில் நடந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி , "நிரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள்" என விமர்சித்தார். இதையடுத்து மோடி என்ற பெயர் வைத்துள்ளவர்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார் என பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் சர்ச்சையை எழுப்பினர்.

பிறகு குஜராத் பா.ஜ.க எம்எல்ஏ புர்னேஷ் மோடி ராகுல் காந்தி பேசியது குறித்து சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில் மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய ராகுல் காந்தி குற்றவாளி என்றும் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் சூரத் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதோடு ராகுல் காந்திக்குப் பிணை வழங்கியது நீதிமன்றம். இந்த தீர்ப்பை அடுத்து "உண்மையே தன்னுடைய கடவுள் என்றும் அகிம்சை மற்றும் உண்மையை சார்ந்ததே தன்னுடைய மதம்" என்று ராகுல் காந்தி ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.ராகுல் காந்தி மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ”சகோதரர் ராகுல் காந்தி போன்ற தலைவருக்கு அவதூறு குற்றச்சாட்டில் தண்டனை விதித்திருப்பது வருந்தத்தக்கது. அவருடன் பேசி எனது ஆதரவைத் தெரிவித்தேன். இறுதியில் நீதி வெல்லும் என்று நம்புகிறேன். எதிர்கட்சிகளை குறிவைக்கும் பா.ஜ.க இப்போது ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.இது போன்ற அட்டூழியங்கள் முடிவுக்கு வரும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்னர் டெல்லி திரும்பிய ராகுல் காந்தியை திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார். இதன் மூலம் திமுக ராகுலுக்கு ஆதரவாக இருக்கிறது என்று திமுக தலைமை டெல்லிக்கு உணர்த்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Also Read: “இலங்கை சிறையில் வாடும் 28 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்..” - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் !