Politics

"அரசை கவிழ்ப்பதற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது" - ஆளுநர்களுக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம் !

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

ஆனால் இதற்கு உடன்படாத பா.ஜ.க தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பா.ஜ.க சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பா.ஜ.க ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்று, துணை முதல்வர் பதவி பா.ஜ.கவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.

இந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு மஹாராஷ்டிரா ஆளுநர் கோஷியாரி உடந்தையாக இருந்ததாகவும், ஏக்நாத் ஷிண்டே என்ற தனி நபரை பெருமபான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது தவறு என்றும் உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதீமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது "சிவசேனா விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை அப்பட்டமான அரசியல் நடந்துள்ளது. மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியை திட்டமிட்டு வீழ்த்தினர்.எந்த சட்டத்தின் கீழ் ஷிண்டேவை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அரசியலமைப்பு பிரிவு ஏ 168 இன் கீழ் ஆளுநர் சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் கிடையாது.

அவர் சட்டமன்றத்தில் ஒரு அங்கம் மட்டும்தான். அரசியல் கட்சியைத் தவிர வேறு யாரையும் அவரால் அங்கீகரிக்க முடியாது.ஒரு கட்சியைதான் ஆளுநர் அங்கீகரிக்க முடியுமே தவிர, ஆட்களை கிடையாது. பின்னர் அவர் ஆட்சி அமைக்க வாருங்கள் என ஏக்நாத் சிண்டேவுக்கு எப்படி அழைப்பு விடுத்தார்” என்று உத்தவ் தாக்கரே தரப்பில் வாதிடப்பட்டது.

பின்னர் ஆளுநர் குறித்து பேசிய தலைமை நீதிபதி, “ கட்சி கொள்கை, வளர்ச்சி, நிதி ஒதுக்குதல் உள்ளிட்டவை தொடர்பாக ஒரு கட்சி எம்எல்ஏக்கள் மத்தியில் மாற்று கருத்து இருக்கலாம். ஆனால் ஒரு அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிடுவதற்கு இது போதுமானதாக இருக்க முடியுமா? நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தால் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து ஆளுநர் செயல்பட வேண்டும். அரசை கவிழ்ப்பதற்கான எந்த நடவடிக்கையிலும் ஆளுநர் ஈடுபடக்கூடாது.மக்கள் தான் ஆளும் கட்சியை தூக்கி எறிவார்கள். ஆனால் கவர்னரால் இங்கு ஆளும் அரசு கவிழ்க்கப்படுவது ஜனநாயகத்திற்கு சோகமான காட்சியாக இருக்கும்” என்று தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இந்த அறிவுரையின் மூலம் ஆளுநரின் எதேச்சதிராக செயலுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வெளிநாடுகளில் இந்தியாவை அவமானப்படுத்திய மோடி முதலில் கண்­ணா­டியை பார்க்கவேண்டும் -முரசொலி விமர்சனம் !