Politics

"நம்மில் பலர் இந்துதான், ஆனால் நாம் இந்துத்துவாவுக்கு எதிரானவர்கள்"-கர்நாடக முன்னாள் முதல்வர் அதிரடி!

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் இந்த ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், கலபுர்கி என்னும் இடத்தில் காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.பட்டீலின் வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நானும் ஓர் இந்துதான். ஆனால் மனுஸ்மிருதிக்கும், இந்துத்துவாக்கும் எதிரானவன் நான். அதேநேரம் இந்து மதத்துக்கு ஒருபோதும் நான் எதிரானவனல்ல. இந்துத்துவா என்பது இந்து மதத்திலிருந்து வேறுபட்டது."

நம்மில் பலர் இந்துத்துவாவுக்கு எதிரானவர்கள். ஆனால் இந்து மதத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. எந்த மதத்திலும் கொலை, வன்முறை போன்றவற்றுக்கு செய்ய வாய்ப்பில்லை. ஆனால் இந்துத்துவாவிலும், மனுஸ்மிருதியிலும் கொலை, வன்முறை, பிரிவினைவாதம் செய்ய வாய்ப்புள்ளது"எனக் கூறினார். இவரின் இந்த பேச்சு கர்நாடகாவில் வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read: “மோடிக்கும், அதானிக்கும் என்ன தொடர்பு?”: நாடாளுமன்றத்தில் அதானி - மோடி கூட்டணியை தோலுரித்த ராகுல் காந்தி!