Politics

“சுதந்திர தினம் இருக்கும்போது குடியரசு தினத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் ?” - ஒரு சிறப்பு பார்வை !

இந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்தியா தனது 73வது குடியரசுத் தினத்தை கொண்டாடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் நமது தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை இந்திய குடியரசு தலைவர் ஏற்றுவார்.

ஆனால், நம்மில் பலருக்கு சுதந்திர தினம் இருக்க குடியரசு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது, அதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுவது தவிர்க்கமுடியாதது. அதற்கு பதிலளிக்கும் விதமாக எழுதப்பட்டதே இந்த தொகுப்பு.

குடியரசு தினம் ஏன் இத்தனை முக்கியமானது ?

'இறையாண்மை' (sovereignty) இந்த ஒற்றை வார்த்தையை பலமுறை நாம் கடந்து சென்றிருப்போம். நம்மில் பலரும் பயன்படுத்தி வருவதுதான். ஆனால் இந்த வார்த்தையின் அர்த்தம் பலருக்கு தெரியாத ஒன்றுதான். ஆனால், இதில் இருந்து தான் ஒரு தேசத்தின் தன்மை, அதிகாரம், உரிமை போன்றவை வரையறுக்கப்படுகிறது.

16-ம் நூற்றாண்டுக்கு முன்னர் இப்படி ஒரு வார்த்தை எந்த அகராதியிலும் கிடையாது. ஆனால், அதன்பின்னர் ஐரோப்பாவில் பல்வேறு மன்னர்களின் கீழ் பிரிந்து கிடந்த மக்கள் தங்கள் தேசிய அடையாளத்தின் கீழ் ஒரே நாடானபோது 'இறையாண்மை' என்ற வார்த்தை புழக்கத்துக்கு வந்தது. அதன்படி ஒரு நாட்டின் 'இறையாண்மை' என்பது மன்னரையோ தனி மனிதரையோ குறிக்காமல் அது அந்த நாட்டின் மக்களை குறிப்பிடத்தொடங்கியது. அதோடு 'இறையாண்மை' மக்கள் முழுச் சுதந்திரத்துடனும் அதிகாரத்துடனும் தங்கள் செயல்பாடுகளை நிர்வகித்துக்கொள்ளும் நிலையையும் குறித்து வந்தது.

இந்தியா 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 150ம் நாள் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றதை அனைவரும் அறிவோம். ஆனால் அதன்பின்னர் கூட இந்தியா 'இறையாண்மை' பெற்ற தேசமாக இருக்கவில்லை. இந்தியா பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டத்தின் கீழேயே (Government of India Act , 1935) செயல்பட்டு வந்தது. அதன் அடிப்படையிலேயே இந்தியாவில் சட்டங்கள் இயற்றப்பட்டன. அரசு நிர்வாகமும் அந்த பிரிட்டிஷ் ஆட்சிக் கால சட்டத்தையே அடிப்படையாக கொண்டு அமைந்திருந்தது.

மேலும், பிரிட்டிஷ் அரசர் அல்லது அரசியை தலைமையாக கொண்ட கவர்னர் ஜெனரல் பதவியே இந்தியாவின் உச்சபட்ச பதவியாக இருந்தது. அதாவது கிட்டதட்ட பிரிட்டிஷ் அளித்த டொமினியன் அந்தஸ்தில்தான் இந்திய அரசு செயல்பட்டு வந்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்த மவுண்ட் பேட்டன் பிரபுவுக்கு பிறகு தமிழ்நாட்டை சேர்ந்த ராஜாஜி சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவியேற்றார். சுதந்திரம் பெற்ற பின்னர் 'இறையாண்மை' பெற்ற நாடாக செயல்பட இந்தியாவுக்கு அரசமைப்புச் சட்டம் தேவைப்பட்டது.

இதற்காக 1947 ஆகஸ்ட் 29 அன்று சட்டமேதை அம்பேத்கர் தலைமையில் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு அமைக்கப்பட்டது. பின்னர் இந்த குழு சமர்ப்பித்த அரசியலமைப்பு சட்டம் 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ராஜாஜி ,1950-ம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி காலை 10.18 மணிக்கு இந்தியாவை இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசாக அறிவித்தார்.

பின்னர் அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்திய குடியரசின் முதல் குடியரசு தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் பதவியேற்று கொண்டார். இதன் மூலம் இந்தியா பிரிட்டிஷாரின் அடையாளத்தை முழுவதுமாக உதறி மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பாக (குடியரசு) மாறியது.

பிரிட்டிஷாரின் கீழ் இருந்த இந்தியா 1950-ம் ஆண்டே தன்னை இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசாக அறிவித்து கொண்டாலும் நம்முடன் ஒரே நாளில் சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான் 1956-ம் ஆண்டுதான் தன்னை குடியரசாக அறிவித்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 1947ம் ஆண்டுக்கு முன் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்ட ஜனவரி 26: குடியரசு தினமாக மாறிய காரணமும்,பின்னணியும்!