Politics

மாண்டஸ் புயல் : “மக்கள் அச்சத்தை விடுத்து நிம்மதி அடைந்துள்ளனர்..” - தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு !

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ் சென்னை தூய்மை படுத்தப்பட்டு வருகிறது. அதோடு மழை காலம் தொடங்க போகிறது என்பதால் முழு வீச்சுடன் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றது.

ஆண்டுதோறும் வரும் வடகிழக்கு பருவமழையால் தமிழக சந்திக்கும் சிக்கல் ஏராளம். ஆனால் இந்தாண்டு திமுக ஆட்சியில் மழைக்காலங்களிலும் மக்களுக்கு எந்தவொரு இடையூறும் இல்லாமல் தமிழ்நாடு அரசு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் (நவம்பர்) பெய்த கன மழை காரணமாக சென்னையில் சாலையோரம் தேங்கிய நீர் உடனே அகற்றப்பட்டது.

இதனால் மக்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான மாண்டஸ் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இந்த புயல் முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது.

அதோடு புயல் காரணமாக பேரிடர் மீட்பு படையினர், மருத்துவக்குழு, மின் ஊழியர்கள் அனைவரும் தயாராக இருந்தனர். மேலும் அந்தந்த துறை அமைச்சர்களும் இதனை உற்று நோக்கி கவனித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காற்றோடு கலந்து மழையடித்ததில் ஆங்காங்கே மரங்கள் வேரோடு விழுந்தன. இதனை உடனே அகற்றும்பணியில் நேற்று இரவு முதலே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்து முடிந்தது. இதனால் தற்போது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த புயலில் பெரிய அளவில் சேதாரங்கள் இல்லை. அதோடு இரவு, பகல் பாராமல் அமைச்சர்கள், அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரும் பணியாற்றி உயிர் சேதாரங்களை தடுத்துள்ளனர்.

அதோடு சாலையில் தண்ணீரும் எங்கும் தேங்கி நிற்கவில்லை. அதே போல் மின் ஊழியர்களும் தங்கள் பணிகளை சிறப்புற செய்து வந்தனர். தற்போது புயல் வந்த தடமே தெரியாத அளவு இருப்பதால் பொதுமக்கள் திமுக அரசுக்காக பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட மாண்டஸ் புயல் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்றிருக்கிறது. பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் பெரும்பான்மையான மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதி அடைந்துள்ளனர்.

புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்படுகின்றன. மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை. அதற்காக பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளார்.

அதே போல், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்பட்ட மாண்டஸ் புயல் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் சென்றிருக்கிறது. மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம். அரசுக்கு பாராட்டுகள்” என்று பதிவிட்டு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உணவு பொட்டலங்களுடன், நிவாரண பொருட்களையும் வழங்கினார். மேலும் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கலந்த பாராட்டுகளையும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு குறைந்துள்ளது; மதியத்திற்குள் நிலைமை சீராகும்” - அமைச்சர் KKSSR