Politics

ஆளுநர்களை தகுதி நீக்கம் செய்ய தனிநபர் மசோதா.. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார் திமுக MP வில்சன் !

மத்தியில் ஆட்சி செய்யும் ஒன்றிய பா.ஜ.க அரசு, தாங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றவேண்டும் என்ற நோக்கில். ஆளுநர்களை வைத்து பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் கேரளா, மேற்கு வங்கம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக தொடர்ந்து ஆளுநர்களை வைத்து விளையாட்டு காட்டி வருகிறது பா.ஜ.க அரசு.

ஏன், ஒரு மாநில அமைச்சரையே பதவி நீக்க கோரி உத்தரவிடும் வகையில் ஆளுநர் நடந்துக்கொள்ளும் கொடுமையெல்லாம் கேரளாவில் நடந்துள்ளது. அதேவேளையில் தமிழ்நாட்டின் அரசியல் சித்தாந்தக் கொள்கைக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிவருவதையே தனது வாடிக்கையாக வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, மாநில மக்களின் நலன் கருதிக் கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாக்களை ஆளுநர் கிடைப்பில் போடு வைத்துள்ள அவலமும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு அரசால் அனுப்பி வைக்கப்பட்ட பல்வேறு சட்டமசோதாக்கள் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இந்த சட்டமசோதாக்களை விரைந்து அனுப்பிவைக்கக் கோரி, கடந்த ஜூன் 2ம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆனாலும், அதுகுறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்துவருகிறார். ஆளுநரின் இந்த செயலுக்கு தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகளும் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆளுநரை மாற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில், ஆளுநர்களை தகுதி நீக்கம் செய்ய அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய தனிநபர் மசோதாவை திமுக எம்.பி வில்சன் இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யவுள்ளார். இது தொடர்பாக தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாவில் ஆளுநர்களை நியமிக்கும் முறையிலும், நீக்கும் முறையிலும் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். தகுதியான நபர்கள் மட்டுமே ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும். ஆளுநர் செயல்பாட்டில் அதிருப்தி ஏற்பட்டால் அவரை தகுதி நீக்கம் செய்ய வழிமுறை வகுக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் அரசியல்சாசன பிரிவு 102, 155, 156 ஆகியவற்றில் உரிய திருத்தங்களை முன்வைத்து தனி நபர் மசோதாவை திமுக எம்.பி வில்சன் கொண்டு வந்துள்ளார். அதனை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

Also Read: மாண்டஸ் புயல்: சென்னை உட்பட 10 மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள துரித நடவடிக்கைகள் என்னென்ன? - விவரம் இதோ!