Politics

”பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டதே மோடியின் கோடீஸ்வர நண்பர்களுக்காகதான்” -ராகுல் காந்தி விமர்சனம் !

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் திட்டம் என பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பா.ஜ.க அரசு அறிவித்து இன்றோடு 6 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன.

மோடி அரசின் இத்தகைய அறிவிப்பின்போது, சரிந்த சிறுகுறு தொழில்கள் தற்போதுவரை எந்தவித வளர்ச்சியையும் அடையவில்லை. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை சாதாரண மனிதர்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இதன் பின்னர், புதிய 500, 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அறிமுகப்படுத்தியபோது ரொக்கப்பணத்தை ஒழித்து டிஜிட்டல் பணத்துக்கு மாறுவோம். கருப்பு பணத்தை ஒழிப்போம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடி கருத்து தெரிவித்தார்.

ஆனால், அதன்பின்னர் வந்த ஆண்டுகளில் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தையே சீரழித்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட சில மாதங்கள் போதிய மாற்று ஏற்பாடுகள் செய்யாததால் ரொக்க பணம் கிடைக்காமல் மக்கள் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் அதன்பின்னர் பொருளாதார பிரச்சனையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வந்த காலங்களில் கருப்பு பணம் பதுக்கல் அதிகரித்த நிலையில், கள்ளநோட்டு புழக்கமும் அதிகரித்தது.

தற்போதுவரை இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு இந்தியாவில் நிழவி வருகிறது. சிறு,குறு தொழில்கள் முற்றிலுமாக முடங்கிய நிலையில் அவர்கள் இடத்தை பெருமுதலாளிகள் எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில் இந்தியாவின் தனது இரண்டு மூன்று கோடீஸ்வர நண்பர்கள் ஏகபோகமாக இருப்பதை உறுதிசெய்ய பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி கொண்டுவந்ததாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், ”பணமதிப்பு நீக்கம் என்பது சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை அழித்து தனது கோடீஸ்வர நண்பர்கள் நலமாக வாழ செய்யப்பட்ட நடவடிக்கை மட்டுமே” எனக் கூறியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியும் இந்த நடவடிக்கையை விமர்சித்து டிவிட் செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ”2016-ம் ஆண்டு இதே நாளில், மோடி தன்னிச்சையாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்து அறிவித்தார். ஆனால் அக்டோபர் 21 ம் தேதி நிலவரப்படி பொதுமக்களிடம் உள்ள பணத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 72% அதிகமாகியுள்ளது. எனவே இந்தியாவை டிஜிட்டல், பணமில்லா பொருளாதாரமாக மாற்றும் நோக்கத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

Also Read: "இதை நீங்கள் செய்துதான் பாருங்களேன்".. ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு சாவல் விட்ட நாராயணசாமி !