Politics

“ஆளுநருக்கு இவ்வளவு தான் அதிகாரம்..”-ஆவேசமான கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.. கேரளாவில் நடப்பது என்ன ?

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஒவ்வொரு மாநில ஆளுநரும், மாநில உரிமைகளை பறிப்பதாக பல்வேறு மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகிறது. தமிழகத்தில் கூட முன்னாள் ஆளுநராக இருந்த பன்வரிலால் புரோஹித் ஆளுநராக இருந்தபோது பல்வேறு இன்னல்களை வெளிவித்ததாக தமிழக அரசு குற்றம்சாட்டியது.

அதன்பிறகு தற்போது ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவியும், மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் கூட சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல், தமிழக அரசிடமே திரும்பி அனுப்பியுள்ளார்.

Tamilnadu Governor RN Ravi

இப்படி பல இன்னல்களை தமிழகம் போல், பல்வேறு மாநிலங்களும் சந்தித்து வருகிறது. அந்த வகையில் தற்போது கேரளா மாநிலத்திலும் ஆளும் கட்சிக்கும், ஆளுநருக்கும் மோதல்கள் ஏற்பட்டுள்ளது. கேரள மநிலத்தில் ஆளுநராக இருப்பவர் ஆரிப் முகம்மது கான்.

கேரள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பான விஷயங்களில் ஆளுநரின் செயல்பாடு காரணமாக மாநில அரசுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டை போல கேரளத்திலும் துணை வேந்தர்களை நியமிப்பதில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு கேரளா ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார்.

Kerala Governor Arif Mohammad Khan

சமீபத்தில் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் நடந்த தேசிய வரலாற்று கருத்தரங்கில் தன்னை தாக்க முயன்றதாக கேரள ஆளுநர் ஆரிப் முகம்மதுகான் ஆதாரமில்லாத குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், கேரள அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கேரள ஆளுநர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முழு உரிமை உண்டு. ஆனால், அமைச்சர்களின் தனிப்பட்ட அறிக்கைகள் மூலம் ஆளுநர் பதவியின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் செயல்பட்டால் அவர்களின் பதவியை திரும்பபெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” மிரட்டல் விடுக்கும் வகையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவையில் முதல்வர் மட்டுமே மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற நிலையில், அதில் தலையிடுவது போல ஆளுநர் மிரட்டல் விடுத்துள்ளது அரசையலமைப்பு சட்டத்தையே மீறும் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்பினர் ஆளுநரின் செயலை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்துவிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரம் திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகம்மதுகானின் செயல்பாட்டை விமர்சித்து பேசினார்.

பினராயி விஜயன்

இது குறித்து பினராயி விஜயன் பேசியதாவது, “யாரும் யாரையும் விமர்ச்சிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுப்பது நம்முடைய சமூகத்தில் ஏற்புடையதாக இருக்காது. விமர்சனம் மற்றும் கருத்தை வெளிப்படுத்த நமது அரசியலமைப்புச் சட்டம் சுதந்திரம் கொடுக்கிறது.

கூட்டாட்சி கொள்கையை கொண்டது நமது நாடு. கூட்டாட்சித் தத்துவத்தில் ஆளுநரின் கடமைகளும், பொறுப்புக்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் குறித்து அரசியலமைப்பு தெளிவாக வரையறுத்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் ஆலோசனையையும், உதவியையும் பெற்று செயல்படுவதே ஆளுநரின் பொறுப்பு. அவரது அதிகாரம் மிகவும் குறுகியது என டாக்டர் அம்பேத்கரே கூறியிருக்கிறார். டெல்லி அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நடந்த வழக்கில் அமைச்சரவையின் ஆலோசனைப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தேர்தலில் அதிக வாக்குகள் பெறும் கட்சி அல்லது முன்னணியின் தலைவர் முதல்வராக நிச்சயிக்கப்படுவார். முதல்வர் அமைச்சர்களை முடிவுசெய்து ஆளுநருக்கு லிஸ்ட் கொடுப்பார். முதல்வர் ஆலோசனையின்பேரில் தான் ஆளுநர் முடிவெடுக்கிறார்.

நமது நாட்டின் அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு முரணாக செயல்படுவேன் என ஒருவர் அறிவித்தால் அது செல்லுபடியாகாது. சமூகத்தின் முன் நாம் யாரும் அவமானப்பட்டுவிடக்கூடாது. கேரள பல்கலைகழகத்தின் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் ஆரோக்கியமான நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். செனட் உறுப்பினர்களை வாபஸ் பெறுவது உள்ளிட்ட ஆளுநரின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது” என்றார்.

Also Read: அமைச்சருக்கு பகிரங்க மிரட்டல்.. அரசியலமைப்பு சட்டத்தை அப்பட்டமாக மீறும் ஆளுநர்.. கேரளாவில் பரபரப்பு !