Politics

"நமக்கு கிடைக்கவேண்டிய உரிமை கிடைக்காவிட்டால் திமுகவின் போர்க்குணம் வெளிப்படும்"-உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

தி.மு.க மாணவரணிச் செயலாளர் - காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்கள் தொகுத்துள்ள "திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தி.மு.க இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு நூலினை வெளியிட, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பெற்றுக் கொண்டார். மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பல மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், "இந்த நூலுக்கு அணிந்துரை எழுத என்னிடம் கேட்டார்; எழுதிக் கொடுத்தேன். பின்னர் நீங்கள் தான் வெளியிட வேண்டும் என கேட்டார், நான் மறுத்தேன். கலைஞரின் புத்தகத்தை நீங்கள் வெளியிட்டால் தான் நன்றாக இருக்கும் என வலியுறுத்தினார். எனவே ஏற்றுக் கொண்டேன்.கலைஞர் குறித்தும், அவரை பற்றிய இந்தபுத்தகம் குறித்தும் எனக்கு முன்னதாக பேசிய அனைவருமே பேசிவிட்டார்கள்.

இந்த புத்தகம் வெளியிடப்படும் இந்த நாள் மிகவும் சிறப்பான நாள். ஏனென்றால் 2வது முறையாக தலைவர் பொறுப்புக்கு போட்டியிட நமது தலைவர் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நாள் இது. திட்டமிட்டு இந்த நாளை தேர்வு செய்யவில்லை. இயல்பாகவே அமைந்துள்ளது.

மேடையில் இருக்கும் நாங்கள் மூன்றாவது தலைமுறையாக இந்த கட்சியில் பணியாற்றிக் கொண்டு இருப்பதாக சொன்னார்கள். அந்த அளவுக்கு தலைமுறை தலைமுறையாக கட்சிக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறோம். இளைஞரணி செயலாளர் என்ற மிகப்பெரிய பொறுப்புக்கு என்னை தலைவர் தேர்ந்தெடுத்தபோது, அதனை ஏற்றுக்கொள்ள நான் தயங்கினேன். எனக்கு வேண்டாம் என்றேன். ஆனால் அப்போது என்னிடம் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என உறுதியாக சொல்லி, அதற்கு பக்கபலமாக நின்றவர்கள் இங்கிருக்கும் அன்பில் மகேசும், எழிலரசனும் தான்.

இந்த நூலின் தலைப்பு தி.மு.க என்பதை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது. ஏனென்றால், தி.மு.க இல்லை என்றால் கலைஞர் இல்லை; கலைஞர் இல்லை என்றால் தி.மு.க இல்லை என்பது தான் உண்மை. எத்தனையோ தடைகளை மீறி இந்த இயக்கத்தை காத்து வளர்த்தவர் கலைஞர் அவர்கள். அவரது வழியில் வந்த நமது தலைவர் அவர்கள், முதலமைச்சராக வர முடியாது என்று பலரும் ஏதேதோ சொன்னார்கள்.

ஆனால் அவர்கள் வாயாலேயே "ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சராஸ் தென் கலைஞர்" என சொல்ல வைத்துள்ளார். அதுதான் அவருக்கு கிடைத்துள்ள சிறந்த பாராட்டு என நான் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். அந்த அளவுக்கு அனைத்து தரப்பினருக்குமான ஆட்சியை முதலமைச்சராக அவர் நடத்திக் கொண்டு இருக்கிறார். அந்த ஆட்சிதான் இனி அடுத்தடுத்த காலங்களும் தமிழ்நாட்டில் தொடரும்.

கலைஞரின் தமிழுக்கும் எனக்கும் இருக்கும் தொடர்பு அவரது உரைகள் வழியாகத் தான். நான் பள்ளிப்பருவத்தில் இருந்தபோது அரசியல் கூட்டங்களில் கலைஞர் பேசிய உரையை, சண்முகநாதன் அவர்கள் டேப் ரெக்கார்டரில் கேட்டு டைப் செய்யும் போது, நான் அருகில் கேட்பேன். அதுதான் எனக்கும் கலைஞரின் தமிழுக்கும் இடையிலான தொடர்பு. அதைக் கேட்டு வளர்ந்து தான் இன்றைக்கு இங்கு நிற்கும் அளவுக்கு வந்துள்ளேன்.

இறுதிகாலத்தில் மருத்துவமனையில் இருந்தபோது கலைஞரிடம் உங்களுக்கு பிடித்த பெயரை எழுதுங்கள் என்று சொன்னபோது அவர் எழுதிய பெயர் ’அண்ணா’. ஒரு பேட்டியில் கலைஞர் அவர்கள், தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் இருப்பது பற்றி தீர்க்கமான பதில்களை சொல்லி உள்ளார். அவர் வழியில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்கும் வகையில் தி.மு.கவின் பணிகள் எப்போதும் இருக்கும். அதற்கு தலைவருக்கு பக்கபலமாக கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டுடன் நமது கழகத் தோழர்கள் அனைவரும் எப்போதும் இருக்க வேண்டும். ஒன்றிய அரசால் நமக்கு கிடைக்கும் உரிமை கிடைக்காவிட்டால் தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் தி.மு.க-வின் போர்க்குணம் வெளிப்படும்." எனக் கூறினார்.

Also Read: திமுக அரசின் சாதனைக்கும் இவருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? வாய்க்கு வந்­த­படி வடை சுடுகிறார் பழ­னி­சாமி!