Politics

”வெந்ததை தின்றுவிட்டு, வந்ததை பேசுபவர்களுக்கெல்லாம்..” - அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு சாட்டையடி பதில்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் 18 தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கு பெறும் கால்பந்து போட்டி இன்று தொடங்கியது. இதனை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் லண்டன், கொரியா, ரஷ்யா, உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, “தமிழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று இருக்கக்கூடிய காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு பல்வேறு வகையில் எடுத்துக்காட்டாக செயல்படக்கூடியவர்.

சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் இந்திய துணைக் கண்டத்திற்கு முன்மாதிரியாக இருப்பவர். ரவுடிகளின் கொட்டத்தை இன்று அடக்கி, போதைப்பொருள் விற்பவர்களை கைது செய்து அமைதிப் பூங்காவாக தமிழகத்தை நிலை நிறுத்தி கொண்டு இருப்பவர்.

முப்படைத் தளபதியின் மரணத்தில் உடனடியாக மீட்பு நிவாரண பணிகளை மேற்கொண்டு உலக அளவில் பாராட்டப்பட்ட காவல்துறை தமிழ்நாட்டினுடைய காவல்துறை. லஞ்ச லாபத்திற்கு அப்பாற்பட்டு, தீவிரவாத மதவாதத்திற்கு இடம் தராமல் செயலாற்றக் கூடிய காவல்துறை தலைவரை முதலமைச்சர் தமிழகத்திற்கு அளித்துள்ளார்.

அரசியல் களத்தில் அடையாளம் காட்டிக் கொள்ள வேண்டும் என்று இருப்பவர்கள் வெந்ததைத் தின்றுவிட்டு வாயில் வந்ததைப் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் கவலைப்பட்டு பதில் கூற வேண்டிய நிலை இல்லை. எங்களை மக்கள் பணிக்கு முதலமைச்சர் அர்ப்பணித்துள்ளார். அந்தப் பாதையில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம்.” என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.