Politics

மனுத்தாக்கல் செய்ய வந்தவரை அடித்து விரட்டிய அதிமுகவினர்: OPS, EPS தூண்டுதலால் நடந்ததாக பரபரப்பு புகார்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான உட்கட்சி தேர்தல் வருகிற 7ஆம் தேதி நடக்க உள்ளதாக அதிமுக அறிவித்திருந்தது. மேலும் அந்த பதவிக்கு போட்டியிடும் நபர்கள் டிசம்பர் 3,4 ஆம் தேதிகளில் அதிமுக தலைமை கழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் நேற்று ஓட்டேரி பாஷ்யம் ரெட்டி முதல் தெருவை சேர்ந்த முதியவரான ஓம்பொடி பிரசாத் சிங்(71) என்பவர் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பபடிவம் வாங்க ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது முறைப்படி பணத்தை செலுத்தி விண்ணப்ப படிவத்தை கேட்ட போது, அதிமுக நிர்வாகிகள் சிலர் விண்ணப்ப படிவம் தர மறுத்து ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து பிரசாத் சிங் நியாயம் கேட்ட போது நிர்வாகிகள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஓம்பொடி பிரசாத் சிங் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குறிப்பாக ஓபி.எஸ் மற்றும் ஈபி.எஸ் தூண்டுதலில் பேரிலேயே தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும், உடனடியாக அதிமுக தலைமை அலுவலக மேனேஜரான மகாலிங்கம், மனோகர் உட்பட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் அதிமுக தலைமை அலுவலக மேனேஜர் மகாலிங்கம், மனோகரன் உட்பட 10 பேர் மீது கலகம் செய்தல், முறையற்று தடுத்தல், காயம் ஏற்படுத்துதல், சேதம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: “இனி தருமபுரியும் தி.மு.க கோட்டை” : மாற்றுக்கட்சியினர் இணைந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!