Politics

அதிமுகவில் பிரபலமாகும் சொத்துக்குவிப்பு வழக்கு: 468% சொத்து சேர்த்த தி.நகர் சத்யா; விஜிலன்ஸில் புகார்!

2011-2016 ஆம் ஆண்டு காலக்கட்டத்தின் போது மாநகராட்சி கவுன்சிலராகவும், 2016- 2020ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தியாகராய நகர் அதிமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் சத்ய நாராயணன். இவரது பதவி காலத்தின் போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக ராயபுரத்தை சேர்ந்த அரவிந்தக்‌ஷன் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த புகாரில் சத்யா 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது சமர்பிக்கப்பட்ட தேர்தல் பிரமாண பத்திரத்தில் 7 கோடியே 53 லட்ச ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாகவும், அவரது மனைவி ஜெயசித்ரா 1,17,51,582 ரூபாய் சொத்துகள் வைத்திருந்ததாக தெரிவித்திருந்தார்.

பின்னர் 2021ம் ஆண்டு தேர்தலின் போது சத்யாவின் மொத்த சொத்து மதிப்பானது 17 கோடியே 17 லட்சத்து 95 ஆயிரத்து 322 ரூபாய் எனவும், அவரது மனைவியின் சொத்துமதிப்பு 2,46,52,534 ரூபாய் என தெரிவித்திருந்தார். மேலும் தனது மகளுக்கு 1.26 கோடி ரூபாய் கடன் வழங்கியிருப்பதாகவும், ஜேசிபி வாகனம், 2 சொகுசு கார்கள், 2 இருசக்கர வாகனங்கள் இருப்பதாகவும் சமர்பித்திருந்தார்.

குறிப்பாக சத்யா எம்.எல்.ஏவாக இருந்த காலக்கட்டத்தில் 11கோடியே 72 லட்சத்து 56 ஆயிரத்து 425 ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் வாங்கிருப்பதாகவும்,1 கோடியே 29 லட்சத்தில் சொகுசு கார்கள் மற்றும் டிராக்டர் வாங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read: மோசடி புகாரில் போலிஸிடம் சிக்காமலிருக்க பட்டினி; தடுப்பூசி ஆவணத்தால் சிக்கிய பலே கில்லாடி.. நடந்தது என்ன?

மேலும் 2016ஆம் ஆண்டு முதல் சத்யா மற்றும் அவரது குடும்பத்தினரின் மொத்த வருமானம் 2 கோடியே 78 லட்சத்து 2 ஆயிரத்து 899 ரூபாய் எனவும், அதில் செலவினம் 92 லட்சத்து 67ஆயிரத்து 633 ரூபாய் போக சேமிப்பு தொகை 1,85,35,266 வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் சத்யா மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து வருமானத்திற்கு அதிகமாக 12 கோடியே 50 லட்சத்து 68 ஆயிரத்து 887 ரூபாய்க்கு சொத்துகள் வாங்கிருப்பதாகவும், வருமானத்திற்கு அதிகமாக 468 சதவிகிதம் சொத்துகள் சேர்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சத்யா பெரும்பாலான சொத்துக்களை கொரோனா காலக்கட்டத்தின் போது வாங்கி இருப்பதாகவும், பல கோடி ரூபாய் சத்யா கடனாக பெற்று பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த சத்யா மற்றும் அவருக்கு துணைப்போன மகள் மற்றும் மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழித்ததில் முறைகேடு செய்திருப்பதாக தி.நகர் சத்யா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை அரவிந்தக்‌ஷன் தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அதிமுகவால் ஆனந்தவாடி மக்களுக்கு மறுக்கப்பட்ட நீதி; பெற்று கொடுத்த திமுக; இதுதான் தளபதி ஆட்சியின் மாட்சி!