Politics
”ஆபாசமாக பேசி வாய்ப்பூட்டு போட நினைத்தால் அது நடக்காது” - H.ராஜாவின் இழி செயலுக்கு ப்ரஸ் கிளப் எச்சரிக்கை
பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து அநாகரிமாகப் பேசிவரும் பா.ஜ.க பிரமுகர் எச்.ராஜாவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு அநாகரிக வார்த்தைகளால் வாய்ப்பூட்டு போட முடியாது எனவும் கூறியுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
”தமிழகத்தில் சமீபகாலங்களில் அரசியல்வாதிகள், சமூக விரோதிகளின் தாக்குதல்களுக்கு எளிய இலக்காகப் பத்திரிகையாளர்கள் ஆளாகி வரும் கொடுமையான போக்கு அதிகரித்து வருகிறது. இது மிக ஆபத்தானது மட்டுமல்ல, கருத்துரிமையில் நம்பிக்கை உள்ள அத்தனை ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும்.
செய்தியாளர்களைச் சந்திக்கும் பல சந்தர்ப்பங்களில், வாய்க்கு வந்தபடி வசவுச் சொற்களைப் பண்பாடு இன்றிப் பயன்படுத்தி வருகிறார் பாஜக பிரமுகர் எச்.ராஜா. நேற்றைய தினம் (27-09-2021 ) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிகழ்வில் எச்.ராஜா, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கலாம் அல்லது தவிர்த்திருக்கலாம்.
ஆனால், நிதானம் தவறி , Presstitute - ஊடக வேசிகள் எனத் தரம் தாழ்ந்து ஏசியுள்ளார். எச்.ராஜாவின் இந்த அநாகரிகப் பேச்சை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
எச்.ராஜா மட்டுமல்ல வேறு சிலரும் , செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் மீது அவதூறு , நேர்மையற்ற விமர்சனங்கள், அநாகரிகச் சொற்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இது கண்டிக்க மட்டுமல்ல தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
எச்.ராஜா அவர்களின் இதுபோன்ற பேச்சுகளை பாஜக தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பது, அவர்கள் எச்.ராஜாவின் இவ்விமர்சனங்களை ஏற்கிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பொதுவெளியில் இத்தகைய ஆபாச விமர்சனங்களைச் செய்துவரும் எச்.ராஜா மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.
பத்திரிகையாளார்கள், ஊடகங்கள் விமர்சனங்களுக்கு உட்பட்டதே. ஆனால், அவை நேர்மையானதாக, தரமானதாக இருக்கட்டும். மாறாக, அவதூறுகளால், மிரட்டல்கள், வாய்ப்பூட்டு போட நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.
தொடர்ந்து ஊடகத்துறையினர் மீது தொடுக்கப்படும் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த ஊடக நிர்வாகிகள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியது மிக அவசியம்.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.”
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!