Politics

”பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர்..” - அவதூறு பேசுவதை நிறுத்திக்கங்க - EPSக்கு அமைச்சர் அறிவுரை!

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

"காஞ்சிபுரத்தில் பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி அவர்கள், திமு.க. அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற பொய்யுரைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். முதலமைச்சர் அவர்கள் மிகத் தெளிவான முறையில் கழக அரசு அமைந்த கடந்த 4 மாதங்களுக்குள்ளாக நாங்கள் கொடுத்த 525 வாக்குறுதிகளில் 220 வாக்குறுதிகளை எவ்வாறெல்லாம் நிறைவேற்றி உள்ளோம். எந்தெந்த வாக்குறுதிகள் எந்த வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளன, சொன்ன வாக்குறுதிகளில் எவற்றை நிறைவேற்றியுள்ளோம், சொல்லாத வாக்குறுதிகளில் எவற்றை நிறைவேற்றியுள்ளோம் என்றெல்லாம் முதலமைச்சர் விளக்கியுள்ள நிலையிலும் எடப்பாடி பழனிசாமி, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானாக மாறி, தனது கூட்டத்திலே தனது கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற போர்வையில் மீண்டும் மீண்டும் திசை திருப்பக் கூடிய தவறுகளை செய்திருக்கிறார்.

தான் திருடனாக இருப்பவர்கள், மற்றவர்கள் சொல்வதை நம்ப மாட்டார்கள் என்ற பழமொழி உண்டு. தாங்கள் இருந்த ஆட்சி காலத்தில் நிறைவேற்ற முடியாதது, சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்தியது என இருந்ததை போல, திமுக அரசு இருப்பதாக பொய்யுரையை புனைந்திருக்கிறார். அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் வரிசையாக அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார்கள். அந்த அறிவிப்புகளில், அவர்களாக சொன்ன அறிவிப்புகளிலேயே 537 அறிவிப்புகளை எந்த நடவடிக்கையும் இல்லாமல் நிலுவையில் போட்டு வைத்திருந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், 348 அறிவிப்புகளுக்கு ஆணைகள் வெளியிட்டார்கள். நிதி ஒதுக்கீடு முழுமையாக செய்யவில்லை. அந்த பணிகள் கிடப்பில் உள்ளன. 143 அறிவிப்புகளுக்கு ஆணைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் சல்லிக்காசு கூட ஒதுக்கவில்லை. 20 அறிவிப்புகளுக்கு ஆணையும் வெளியிடவில்லை. நிதியும் ஒதுக்கப்படவில்லை. 26 அறிவிப்புகள் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளன. எப்படி இந்த அறிவிப்புகளை அறிவித்தார்கள் என்றே தெரியாமல், எந்தவித ஆராய்ச்சியோ அடிப்படை தகவல்களே இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டு, அவற்றை கைவிற்றுக்கிறார்கள். ஆனால் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசை பார்த்து அவர் அவதூறு கூறுவது நகைப்பாக உள்ளது.

Also Read: வளர்ச்சி திட்டங்களுக்கு குந்தகம் விளைவிப்பதா? ஓ.பி.எஸ்-ஐ சரமாரியாக தாக்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

"காமாலைகாரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதை போல" அவர் தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காக திமுக அரசை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். முதலமைச்சர் சொன்னதை ஒழுங்காக கேட்டிருந்தால் அவருக்கு எந்த ஐய்யபபடும் இருந்திருக்காது. அதிமுக ஆட்சியில் நடந்த கூட்டுறவு சங்க முறைகேடுகளில் திமுகவினர் தான் பலன் அடைந்திருப்பதாக கூறியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் முறைகேடாக நடத்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடாக வென்று அதற்கு தலைவராக வந்தவர்கள் அனைவரும் அதிமுகவினர் தான். அவர்களை கைகளில் வைத்துக் கொண்டு மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பது குறித்து மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் விளக்கியுள்ளார்.

மடியில் மொத்த கன்னத்தையும் வைத்துக் கொண்டு பதரிபி போய் பேசி வருகிறார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகளை தடுக்க நடுஇரவில் கூட இன்றைய முதலமைச்சர் தேர்தல் ஆணையத்திற்கு சென்று புகார் அளித்தார். அன்றைக்கு தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக வைத்துக் கொண்டு முறைகேடுகளுக்கு முயற்சித்த எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் அதையெல்லாம் மறந்து விட்டார் என நினைக்கிறாரா? ஜனநாயகத்தை பற்றி அவர் பேசுவதெல்லாம் கேலிக்கூத்து. 2016ல் இன்றைய சபாநாயகரின் வெற்றியை தடுத்தது அவர்கள் தான். ஆகவே அவர் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதை போன்றதும். மடிக்கணினி கொடுத்ததாக சொல்கிறார். டேப்லெட் கொடுப்பதாக சொன்னார்களே என்ன ஆனது. சமச்சீர் பாடத்திட்டத்தை நடைமுறைபடுத்தாமல், அந்த புத்தகங்ககளை வீணடிக்கும் வகையில், அய்யன் திருவள்ளுவர் படத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது யார்?

சட்டம் ஒழுங்கை பற்றி பேசியுள்ளார். அன்றைக்கு ரவுடிகள் எல்லாம் வெளிமாநிலம் போய்விட்டதாக சொன்னார்கள். ஆனால் இவர்களின் ஆட்சியில் தான் ரவுடிகள் திரண்டு மாநாடு போல நடத்தி, பிறந்த நாள் கொண்டாடியது யாருடைய ஆட்சியில் நடந்தது. பாம்பின் கால் பாம்பறியும் என்பதை போல கடந்த உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் செய்த முறைகேடுகளை நினைத்து, இப்போதும் அதேபோல நடக்கும் என்பதை போல பேசி வருகிறார். அப்படி செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. முதலமைச்சரின் திட்டங்களால் மக்கள் அனைவரும் பெரும் ஆதரவு வழங்க தயாராக இருக்கிறார்கள். எனவே தொடர்ந்து அவதூறு பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இதுபோல அவர்களது முகத்திரை கிழிக்கப்படும்" என்றார்.

Also Read: ”இந்த ஃபார்முலாவை இந்தியாவுக்கு சொல்லிக் கொடுத்ததே மு.க.ஸ்டாலின்தான்” - தினகரன் நாளேடு கூறியது என்ன?