Politics

”10 ஆண்டுகளில் 9 அமைச்சர்களை மாற்றி musical chair விளையாடிய அதிமுக” - தாறுமாறாக தாக்கிய கல்வி அமைச்சர் !

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் அளித்துள்ள பதிலுரையின் விவரம் பின்வருமாறு:-

சட்டப்பேரவையில் சபாநாயகர் correspondent ஆகவும், முதலமைச்சர் HM ஆகவும் வழி வழி நடத்தும் இந்த அவையில் நான் இருப்பது பெருமை எனவும், நிதியமைச்சர் நியாயத்திற்கு மட்டும் கோபப்படும் Angry bird என குறிப்பிடுவோம், என்றார்.

பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.32,599.54 கோடி தொகை மக்களின் வரிப்பணம் எனவும், அதை குழந்தைச் செல்வங்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கியதாக கூறினார்.

தமிழகத்தில் நாம் சந்திக்கும் 6 பேரில் ஒருவர் மாணவர் என்றும், இந்தத் துறை கவனத்துடன் கையாள வேண்டும் எனவும் முதலமைச்சர் கூறினார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மீட்பது மிகப்பெரிய பணி என்று குறிப்பிட்ட முதல்வர், பதவியேற்ற முதல் நாளே அங்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதாக கூறினார்.

மாணாக்கர்களின் கற்றல் திறனை அதிகரித்து இடைநிற்றலை குறைப்பது முக்கிய பணியாக மேற்கொள்ள உள்ளோம். நம் மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண் எடுத்தாலும், கற்றல் திறனில் மிகவும் குறைவாக இருக்கிறார்கள். கற்றல் திறனில் நாட்டிலேயே 23வது மாநிலமாக நாம் இருக்கிறோம், 10 இடத்திற்குள் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். கற்றல் திறனை அதிகரிக்க ரூ.213.6 கோடி நிதியில் கற்பித்தல் இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டில் இந்தத் துறைக்கு 9 அமைச்சர்கள் மாற்றப்பட்டு, Musical chair போல விளையாடியிருக்கிறார்கள். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்கலாம் என்று கேட்டபோது, 18 பரிந்துரைகளை பரிசீலித்து, அதில் ஒரு மாணவனைப் போல செயல்பட்ட முதலமைச்சர், சிறப்பான முடிவை எடுத்தார். அதை 8.20 லட்சம் மாணவர்கள் ஏற்றுக்கொண்டார்கள், 19 மாணவர்கள் மட்டுமே மறு தேர்வுக்கு விண்ணப்பித்ததாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக கொள்முதல் செய்யப்பட்ட 65 லட்சம் விலையுள்ள புத்தகப் பைகளில் முன்னாள் அதிமுக முதலமைச்சர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது குறித்து, முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்ட போது, 13 கோடி ரூபாய் செலவில் அதனை மாற்றலாம் என கூறினோம்.

இது மக்களின் வரிப்பணம், 13 கோடி ரூபாய் இருந்தால் அதை பள்ளி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வேறு திட்டம் செயல்படுத்துவேன். அந்த புத்தகப்பையில் அவர்களின் படமே இருந்துவிட்டுப் போகட்டும், என பெருந்தன்மையுடன் பேசியதை விட்டுக்கொடுத்ததாக கூறினார்.

6-8ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை அரை மணி நேரமும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை நடத்துவதற்கு பரிசீலனையில் உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனை அதிகரிக்க ஸ்போக்கன் இங்கிலீஸ் வகுப்புகள் நடத்தப் படுவது வரவேற்கத்தக்கது என சபாநாயகர் தெரிவித்தார்.