Politics

”சமத்துவம் என்றதும் கசப்பும் எரிச்சலும் வருகிறதோ” - சு.சாமியை கடுமையாக சாடிய திருமாவளவன் எம்.பி.!

தந்தை பெரியார் கண்ட கனவு அகில இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியுள்ளார்.

அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு:-

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் இல்லை என்றால் நீதிமன்றம் செல்லப் போவதாக சுப்ரமணிய சாமி உள்ளிட்டோர் பேசி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆக்கும் திட்டம்; திமுக அரசு சமூக நீதிக்கான அரசு என்பதை உறுதி படுத்தும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற, பெரியாரின் கனவை நனவாக்கி இருக்கிறது. இது இந்திய அரசியலில் நிகழ்ந்திருக்கிற ஒரு மகத்தான சமூகப்புரட்சி என்றார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன் எம்.பி., மனிதன் நிலவுக்குள் காலடி எடுத்து வைத்து விடலாம், ஆனால் கோவிலின் கருவறைக்குள் நுழைய முடியாது, என்ற நிலை இந்தியாவில் ஆயிரம் தலைமுறைகளாக நீடிக்கிறது. இதுதான் சனாதனம் என்ற அவலம், பேரவலம். ஆகவேதான் பெரியார் அவர்கள் கோயிலின் கருவறைக்குள் அனைவரும் நுழைய உரிமை வேண்டும் என்கிற போர்க்குரலை எழுப்பினார்.

அவருடைய வழியில் கலைஞர் சட்டமாக்கினார்; இன்று கலைஞர் வழியில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நடைமுறைப் படுத்தியிருக்கிறார். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனப்பூர்வமாகப் பாராட்டி, வரவேற்கிறது. சமூக நீதியைக் காக்கும் அறப்போரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அனைத்து வகையிலும் உற்ற துணையாக இருக்கும் எனக் கூறினார்.

இதனையடுத்து, சுப்பிரமணிய சாமி போன்றவர்கள் எப்போதும் சமத்துவத்தை விரும்பியதில்லை. அதனால் அவர்களுக்கு எரிச்சலைத் தருகிறது. இந்துக்களாக இருப்பவர்கள் எல்லோரும் உள்ளே நுழையலாம் என்கிற போது இவர்கள் மறைமுகமாக இந்துக்கள் இல்லை என எரிச்சல்படுகிறார்கள் ஆத்திரப்படுகிறார்கள். தந்தை பெரியார் கண்ட கனவு அகில இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டோம் என்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது மிகப்பெரிய நம்பிக்கையை தருகிறது. அவருக்கு உற்ற துணையாக இருப்போம் என திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.

Also Read: அவதூறுகளுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... பின்வாங்கிய சுப்பிரமணியன் சுவாமி!