Politics
சென்னை IIT-ல் தொடரும் சாதிய பாரபட்சம்: இட ஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்றுவதே தீர்வு - CPIM வலியுறுத்தல்
சென்னை ஐஐடியில் தொடரும் சாதிய பாரபட்சம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அண்மைக்காலமாக சென்னை ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் சாதிய பாகுபாட்டு அணுகுமுறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. இத்தகைய குற்றச்சாட்டுகள் அவ்வப்போது தகுந்த ஆதாரங்களோடு வெளியாவதும், அதற்கெதிரான போராட்டங்கள் நடைபெறுவதும் தொடர்ந்து வெளிவருகிறது.
இந்நிலையில் அண்மையில் அங்கு உதவி பேராசிரியராக பணிபுரியும் விபின் என்பவர் பணிக்குச் சேர்ந்த 2019 ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தொடர்ச்சியாகவே, தன்னை ஒரு சாதிய பாரபட்ச கண்ணோட்டத்துடனேயே அங்கிருந்த பலர் அணுகியதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பணியிலிருந்து விலகுவதாகவும் பகிரங்கமாக ஒரு கடிதத்தை வெளியிட்டதோடு, தனது பணியையும் ராஜினாமா செய்திருக்கிறார்.
ஏற்கனவே ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அங்கு சமூக அநீதி இழைக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு உதவி பேராசிரியரே இத்தகையதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதோடு, அவரின் குற்றச்சாட்டு மற்றும் அவரது ராஜினாமாவின் மூலம் சென்னை ஐஐடி வளாகத்தில் சாதிய பாரபட்ச அணுகுறைகள் தொடர்வதை உறுதிபடுத்துகிறது. மாணவர் சேர்க்கையிலும், பணி நியமனங்களிலும் சட்டப்படியான இட ஒதுக்கீடுகளை ஐ.ஐ.டி. தொடர்ச்சியாக புறக்கணிக்கும் செய்திகளும் வருகின்றன.
எனவே, இந்த வளாகத்தில் தொடரும் சாதிய பாகுபாட்டு அணுகுமுறைகளையும், சமூக அநீதிகளையும் முற்றாக களைவதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத சென்னை ஐஐடி நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இப்பிரச்னையின் முக்கியத்துவம் கருதி ஒன்றிய அரசு உடனடியாக இங்கு நிலவும் சாதிய பாரபட்சத்தை முற்றாக ஒழித்திடவும், மாணவர் சேர்க்கையிலும், பணி நியமனங்களிலும் இட ஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம். தமிழக அரசும் இந்த விஷயத்தில் தலையிட்டு ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகாண வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இதே ஐ.ஐ.டி.யில் பிராஜெக்ட் அசோசியேட்டாக பணிபுரிந்து வந்த கேரள மாநிலத்தைச் சார்ந்த இஸ்ரோ விஞ்ஞானியின் மகன் உன்னிகிருஷ்ணன் (வயது 30) என்பவர் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள மைதானத்தில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அதிர்ச்சியளிக்கும் இச்சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கோருகிறது.”
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!