Politics

அரசு கான்ட்ராக்டர்கள் மூலம் பணப்பட்டுவாடா செய்ய திட்டமிடும் அதிமுக - கே.பாலகிருஷ்ணன் கடும் குற்றச்சாட்டு!

சென்னை மயிலாப்பூரில் த.வேலுவுக்கு ஆதரவாக சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க வேட்பாளர் மயிலை த.வேலுவை ஆதரித்து சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகில் உள்ள 123 அ வட்டம் பகுதியில் உள்ள கபாலி தோட்டம் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிக்க வந்த மயிலை த.வேலு மற்றும் கே.பாலகிருஷ்ணனை அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

Also Read: “ஜெயலலிதா ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி பெயரை கூட நான் கேள்விப்பட்டது கிடையாது” : ப.சிதம்பரம் கிண்டல்!

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன்,

“மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு தனி இட ஒதுக்கீடு வழங்கி இருப்பதை ஏற்க இயலாது என மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதிமுகவின் கூட்டணி கட்சியான மத்திய பாஜக அரசு எடுத்துள்ள இந்த முடிவு குறித்து தமிழக அரசு என்ன விளக்கமளிக்க போகின்றது?

எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் முடக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ஏன் சோதனைகள் நடத்தவில்லை. தேர்தல் ஆணையமும் எதிர்க்கட்சியினரிடம் ரெய்டு நடத்தி முடக்க பார்க்கிறது.

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ரெய்டு நடந்தது அரசியல் உள்நோக்கம் நிறைந்தது. தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மத்திய, மாநில அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் செயல்படுகின்றனர்.

அதிமுகவை பொறுத்தவரை அவர்கள் பணபலத்தை மட்டுமே நம்பியுள்ளனர். அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மாநிலம் முழுவதும் பலனில்லை. தங்களுக்கு வேண்டிய அதிகாரிகள், அரசு காண்ட்ரக்டர்கள் மூலமாகவும் பண விநியோகம் செய்கின்றனர். தேர்தல் ஆணையம் இவையெல்லாம் தெரிந்தும் எதுவும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது பகுதி செயலாளர் நந்தனம் மதி, வட்ட செயலாளர் மு. ராஜேந்திரன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தோழமை கட்சியினர் உடன் இருந்தனர்.

Also Read: இதுதான் குஜராத் மாடலா மிஸ்டர் மோடி?: 2 ஆண்டுகளில் 13,000 குழந்தைகள் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்!