Politics

பாஜக ஒரு வன்முறை கட்சி.. சட்டத்தை மீறி வேல் யாத்திரை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை பாயாதது ஏன்? -முத்தரசன்

தடையை மீறி பாஜகவின் வேல் யாத்திரை நடந்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என முதல்வர் கூறியிருந்த நிலையில், ஏன் சட்டம் கடமையை செய்யவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாற்றுக் கட்சியில் இருந்து ஏராளமானோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் நிகழ்ச்சி சென்னை தி.நகர் பாலன் இல்லத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பாரதிய ஜனதா கட்சி ஒரு வன்முறை கட்சி. வேல் யாத்திரையை நடத்தக்கூடாது என்று நீதிமன்றமே அனுமதி மறுத்ததற்கு பிறகும் அவர்கள் வேலி யாத்திரையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா பரவும் இந்த நேரத்தில் அதனை பொருட்படுத்தாமல் நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல சட்டத்தை மீறுவோர் என்று வேண்டுமென்றே யாத்திரையை தொடர்கின்றனர். சட்டத்தை மீறி யாத்திரை நடத்தினால் சட்டம் தன் கடமையை செய்யும் என முதல்வர் கூறியிருந்த நிலையில் தற்போது ஏன் சட்டம் அதன் கடமையை செய்யவில்லை?

யாத்திரை மூலமாக பாஜகவினர் 2 திட்டங்களைத் தீட்டி உள்ளனர். அதிகம் கொரோனா பரவி மக்கள் சாகவேண்டும். மற்றொன்று தமிழ்நாட்டை தொடர்ந்து பதற்றத்தில் வைத்திருப்பதுடன் திசைதிருப்பி அரசியல் ஆதாயம் தேட வேண்டும் ஆகிய இரு நோக்கங்களையும் பாஜகவினர் கொண்டுள்ளனர்.

பாம்பிற்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டுகின்ற வேலையில் தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது. எதிர்க்கட்சிகள் கூறும் எந்த ஒரு கருத்தையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்வதில்லை.

பாஜகவின் வேல் யாத்திரைக்கு முதலமைச்சரே அனுமதி மறுத்துள்ளபோது யாத்திரை நடந்தால் கொரோனா பரவாது என அதிமுக அமைச்சர் பேசியிருக்கிறார். முதுகெலும்புள்ள முதலமைச்சராக இருந்தால் அந்த அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முத்தரசன் கூறியுள்ளார்.

Also Read: முருகன் கோவிலே இல்லாத பகுதிகளில் வேல் யாத்திரை நடத்துவது ஏன்? - பாஜகவுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி!