Politics

அதிமுகவின் ஏவல் துறையானதா காவல்துறை? எதிர்க்கட்சியின் போராட்டத்துக்கு அனுமதிக்காததற்கு திமுக MLA கண்டனம்!

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிமுகவினர் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் காவல்துறை அனுமதி வழங்கியது ஏன்? கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “கடந்த 27.10.2020 அன்று , கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஊழல் முறைகேடுகளை கண்டித்தும், கழகத்தின் மீது அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்களை கண்டித்தும், கோவை வட்டாட்சியர் அலுவலகம் முன் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஜனநாயக முறைப்படி காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டும் அனுமதி மறுக்கப்பட்டது.

காவல்துறையினர் ஆர்ப்பாட்ட பேனர்களை கிழித்து, தள்ளிவிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தடுக்க முயன்றனர். ஆனால் இன்று 29.10.2020 ஆளும் கட்சியான அ.தி.மு.க சார்பில் செஞ்சிலுவை சங்கம் அருகில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சந்திப்பு, பீளமேடு ராதா கிருஷ்ணா மில் சந்திப்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், முகம் சுளிக்கும் வகையிலும் மேடை அமைத்து, ஒலிபெருக்கிகள் அமைத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்

Also Read: உப்பு நீரை விநியோகிக்காமல் குளறுபடி செய்து, கோவை மக்களை பரிதவிக்க விடுவதா? -திமுக MLA கார்த்திக் கண்டனம்

தி.மு.க போராட்டத்திற்கு மட்டும் காவல்துறை சார்பில் அனுமதி மறுத்த நிலையில், இவ்வாறு பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் அ.தி.மு.கவினருக்கு மட்டும் அனுமதி வழங்கியதற்கு காரணம் யார்?

அ.தி.மு.கவினரின் ஏவல் துறையாக காவல்துறை மாறிவிட்டதா?எதிர்க்கட்சிக்கு அனுமதி மறுப்பு! ஆளுங்கட்சிக்கு அனுமதி என்ற பாரபட்சம் ஏன்?

இவ்வாறு பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.கவினர் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியதை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “குடிநீர் விநியோகிக்கும் வேலையைக் கூட செய்யாத கையாலாகாத அரசாக உள்ளது அதிமுக” - கோவை தி.மு.க MLA விமர்சனம்