Politics

ஜி.கே.வாசனுக்கு சீட் கொடுத்து பிரேமலதாவுக்கு 'டாட்டா' காட்டிய எடப்பாடி - சிக்கலில் அ.தி.மு.க கூட்டணி?

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்தக் காலி இடங்களுக்கு புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக வருகிற 26-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று ஆணையம் அறிவித்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான தி.மு.க வேட்பாளர்களாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இவர்கள் மூவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை சீட் தரப்பட்ட நிலையில் தே.மு.தி.கவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க மாநிலங்களவை சீட் கேட்டு பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோர் தொடர்ந்து அ.தி.மு.க-வை வலியுறுத்தி வந்தனர். சுதீஷ், எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து மாநிலங்களவை சீட் கேட்டு வலியுறுத்தினார்.

இதற்கிடையே, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பா.ஜ.க மேலிடத் தலைவர்கள் மூலம் அ.தி.மு.க தலைமைக்கு அழுத்தம் கொடுத்து காரியத்தைச் சாதித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க-வின் சொல் கேட்டு நடக்கும் அ.தி.மு.க-வும் ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா சீட்டை தாரைவார்த்துள்ளது.

கூட்டணியில் சேரும்போது கூட்டணி தர்மத்தை மதிக்கும் உங்களுக்கு உரிய மரியாதை தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தே.மு.தி.க-வும் அ.தி.மு.க, பா.ஜ.க அரசுகளுக்கு சாதகமாகவே பேசி வந்தது. ஆனால், இப்போது பா.ஜ.க பேச்சைக் கேட்டு சீட் தராமல் ஏமாற்றிவிட்டதாக ஆதங்கப்படுகிறார்கள் தே.மு.தி.க தொண்டர்கள்.

மாநிலங்களவை சீட் வழங்க அ.தி.மு.க மறுத்துள்ள நிலையில், அதிருப்தியில் இருக்கும் தே.மு.தி.க கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

Also Read: மாநிலங்களவை வேட்பாளர்கள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு!