Politics

#CAA : 'மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தை, இந்து சமயத்திற்கு எதிராக திசை திருப்ப முயற்சி’ - திருமாவளவன்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடக்கும் போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறைக்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என வி.சி.க தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசிய விவரம் பின்வருமாறு :

“குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணிக்கு அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்புக் கொடுத்த திருச்சி மாநகர காவல்துறைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் இன்று வன்முறை வெடித்திருக்கிறது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. இத்தகைய வன்முறை வெடித்தது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு. அதற்கு பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான எதிர்ப்பு என்பது மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானது மட்டுமே. இது இந்து சமூகத்திற்கு எதிரானது எனப் பார்ப்பது திசைதிருப்பக்கூடிய அரசியலாகும். மோடி அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும். குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.

என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும். தமிழக முதல்வர் நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும்.

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., விவகாரத்தில் தாங்கள் எடுத்த வரலாற்றுப் பிழையை நியாயப்படுத்தும் முயற்சியில் அ.தி.மு.க அரசு ஈடுபட்டுள்ளது. மாநிலங்களவையில் மோசமான சட்டத்தை ஆதரித்து தவறாக வாக்களித்து விட்டோம் என்று அ.தி.மு.க இன்னும் உணரவில்லை. இது மிகப்பெரிய குற்றம். பாவச்செயல். கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் என்ன நடைமுறையில் இருந்தது என்று அதே நடைமுறையில் இருக்கிறது என்று சொல்வது அப்பட்டமான பொய்.

File image : Thirumavalavan

டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என்று அறிவித்த முதல்வர், வேதாந்தா, ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை, உரிமைகளை ரத்து செய்வதற்கு எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப் போவதில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை ரத்து செய்யாமல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பது தமிழக அரசை விடுதலை சிறுத்தைகள் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது. ட்ரம்பின் வருகைக்காக குடிசை குடியிருப்புகளை மாற்றாமல் அதனை மோடி அரசு மறைத்திருப்பது வெட்கக்கேடானது” என திருமாவளவன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

Also Read: இந்தியாவை அதிபர் ஆட்சி நாடாக மாற்ற முயற்சிக்கிறார் மோடி: நாடாளுமன்றத்தில் வெடித்த திருமா !