Politics

“பொருளாதாரம் பற்றி மோடிக்கு ஒன்றுமே தெரியாது” - போட்டுத்தாக்கும் ராகுல் காந்தி!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடியை பல்வேறு விஷயங்களில் கடுமையாகச் சாடிப் பேசினார்.

அந்தப் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது, “காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இந்தியா 9% வளர்ச்சியடைந்ததால் உலகமே உற்றுநோக்கியது. ஆனால் பா.ஜ.க அரசின் அளவீட்டின்படி தற்போது, GDP 5 சதவீதமாக இருக்கிறது. உண்மையில் GDP இப்போது 2.5 % ஆகத்தான் இருக்கும்.

பொருளாதாரம் பற்றி மோடி படிக்கவும் இல்லை; புரிந்துகொள்ளவும் இல்லை. ஜி.எஸ்.டி என்றால் என்ன என்பது கூட மோடிக்கு தெரியாது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீங்குதான் விளைந்தது என்பதை 8 வயது குழந்தை கூட சொல்லும்.

பிரதமர் மோடி 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் கடந்த ஆண்டில் மட்டும் 1 கோடி இளைஞர்கள் வேலையிழந்துள்ளனர். பிரதமர் எங்கு சென்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு பற்றிப் பேசுகிறார்; ஆனால் வேலையின்மை எனும் மிகப்பெரிய பிரச்னையை பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை.

இந்தியாவின் அடையாளமாக சகோதரத்துவம், ஒற்றுமை ஆகியன இருந்தன. அந்த அடையாளத்தை பிரதமர் மோடி சீரழித்துவிட்டார். இந்தியா இன்று உலகின் கற்பழிப்பு தலைநகராக கருதப்படுகிறது.” என அடுக்கடுக்காகக் குற்றம்சாட்டினார்.

Also Read: மோடி அரசால் 3 கோடியாக உயர்ந்தது வேலையில்லா திண்டாட்டம் : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!