Politics
''ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்கலாம்'' - கடுமையாக விமர்சித்த அ.தி.மு.க நிர்வாகிகள்!
துக்ளக் 50வது ஆண்டுவிழாவில் ரஜினிகாந்த், சேலத்தில் 1971ல் நடைபெற்ற பேரணி குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என பெரியாரிய உணர்வாளர்கள், திராவிடர் கழகத்தினர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், தனது கருத்து சரிதான் என்றும் தான் எதையும் கற்பனை செய்து பேசவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தான் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
ரஜினியின் இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவ்வகையில், பெரியார் குறித்து பேசுபவர்கள், அவரது கருத்துகளை முழுமையாகப் படித்து தெரிந்துகொண்டு பேச வேண்டுமென துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்றிரவு (ஜன.21) செய்தியாளர்களைச் சந்தித்த துனை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "கீழ்த்தட்டில் இருக்கும் ஏழை, எளிய மக்கள், உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக பெரியார் பகுத்தறிவுப் பகலவனாகத் திகழ்ந்தார்.
என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட மிக உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார். தந்தை பெரியார் சொன்ன கருத்துகள் இன்றைக்கு கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை" எனத் தெரிவித்தார்.
அதேபோல இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ''50 வருடங்களுக்கு முன் நடைபெறாத ஒரு விஷயத்தைப் பற்றி நடிகர் ரஜினிகாந்த் ஏன் பேச வேண்டும்? அவர் சொல்வதைப் போல ஒரு சம்பவமே நடக்கவில்லை என பல ஊடகங்களில் எழுதியுள்ளனர்.
துக்ளக்கில் எழுதிய சோவே, சில அமைப்புகள் சொன்ன தகவலைத் தான் தாம் பதிவு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். நடைபெறாத ஒரு விஷயத்தை நடிகர் ரஜினிகாந்த் சொல்லி, இதுபோல,மக்களை திசைதிருப்பும் வேலையில் ஏன் ஈடுபட வேண்டும். தேவையில்லாததை பேசுவதற்கு பதிலாக ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்கலாம்'' எனத் தெரிவித்தார்.
ரஜினியின் பேச்சிற்கு பா.ஜ.க முக்கிய தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் போலி Instagram கணக்கு : பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி - நடந்தது என்ன?
-
தமிழ்நாட்டில் 4 உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்!
-
”இந்திய நீதித்துறையை அச்சுறுத்துவதற்காக வீசப்பட்ட காலணி” : கி.வீரமணி கடும் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி, மேம்பாட்டு மையமாக மாற்ற வேண்டும்” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
-
கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : இரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு!