Politics
“இதனால் தான் சபாநாயகர் முன்பே ஆளுநர் உரையைக் கிழித்தெறிந்தேன்” - ஜெ.அன்பழகன் MLA விளக்கம்!
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று அ.தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் அடுத்த கூட்டத்தொடர் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தனக்கு பேச வாய்ப்பளிக்காமல் புறக்கணித்த சபாநாயகர் முன் சென்று ஆளுநர் உரையைக் கிழித்ததால், உடனடியாக தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பின்னர் சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ, “உள்ளாட்சி தேர்தல் நல்லமுறையில் நடைபெற்றிருப்பதாக அமைச்சர்கள் கூறினர். உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடைபெற்ற முறைகேடுகளைப் பட்டியலிட்டுப் பேசினேன். அதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அ.தி.மு.க அரசு சட்டம் ஒழுங்கில் முதலிடம் பெற்றதாக முதல்வர் தெரிவித்தார். மத்திய பா.ஜ.கவுக்கு அடிமையாக இருப்பதற்காக இந்த அங்கீகாரமா? ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு முதலிடமா? சட்டம் ஒழுங்கை மீறிப் பேசியதாக நெல்லை கண்ணனை கைது செய்தீர்களே அதற்கு முதலிடமா?
கல்லூரி வளாகத்திற்குள் குண்டு வீசுவோம் எனப் பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? உயர்நீதிமன்றத்தை தரக்குறைவாகப் பேசிய அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? பெரியார் சிலையை உடைப்போம் எனச் சொன்ன அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய அ.தி.மு.க பிரமுகரை பிடிக்க வக்கற்றது இந்த அரசு. இதில் சட்டம் ஒழுங்கில் சிறப்பாக செயல்படுவதாகச் சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
இந்த அரசு எதில் முதலிடம்? உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தினசரி அரசை விமர்சித்து குட்டு வைக்கிறதே.. அதில்தான் இந்த அரசு முதலிடம். ஊழலில் முதலிடம்.
சிறுபான்மையினர் பாதுகாப்பு என அ.தி.மு.கவினர் நாடகமாடுகிறார்கள். ஆனால், அ.தி.மு.க-வும், பா.ம.க-வும் மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்திருக்காவிட்டால் அந்த மசோதா தோற்றுப் போயிருக்கும்.
இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு பற்றி எரிகிறதென்றால் அதற்குக் காரணம் இந்த அ.தி.மு.க தான். இவற்றையெல்லாம் 5 நிமிடங்கள் தான் பேசியிருப்பேன். தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது நான் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்.
சபாநாயகரிடம் சென்று, நான் தயாரித்த குறிப்புகளைக் காட்டி, இன்னும் 5 நிமிடங்கள் ஆளுநர் உரை மீது பேச வாய்ப்பளிக்கவேண்டும் எனக் கேட்டேன். ஆனால் அவர் அனுமதி வழங்காமல், பேசக்கூடாது எனக் கூறினார். அதனால் தான், ஆளுநர் உரையை சபாநாயகர் முன்பே கிழித்தேன்.” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெ.அன்பழகன், பட்ஜெட் உரையையே அப்போதைய முதல்வர் கலைஞர் முன்பு கிழித்தெறிந்தவர் ஜெயலலிதா. நான் இன்று ஆளுநர் உரையைக் கிழித்ததற்கு அவர்தான் முன்னுதாரணம்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!