Politics

#CAB2019 : இதைவிட எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை யாராலும் கேவலப்படுத்த முடியாது மிஸ்டர் எடப்பாடி !

பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆதரவளித்து, அ.தி.மு.க இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது.

பா.ஜ.க அரசின் குடியுரிமைத் திருத்த மசோதாவில், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்து, சீக்கியர், பௌத்தம், சமணம், பார்சி மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கு குடியுரிமை வழங்குவதற்காக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பா.ஜ.க அரசு குறிப்பிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் மற்றும் இந்தியா வாழ் இலங்கை அகதிகள் ஆகியோர் குடியுரிமை சட்டத் திருத்த பட்டியலில் இடம்பெறாததற்கு தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்ததோடு, எதிர்த்து வாக்குகளையும் பதிவு செய்துள்ளன.

தமிழர்கள், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு நிறைந்த பா.ஜ.க அரசு இந்த மசோதாவைக் கொண்டு வருவதில் ஆச்சர்யமில்லை. ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான கட்சியாக சுட்டப்பட்டு வரும் அ.தி.மு.க இந்த குடியுரிமை மசோதா நிறைவேற்றத்துக்கு துணை போயிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க-வின் தலைவர் எம்.ஜி.ஆர் இலங்கையிலிருந்து தமிழகம் வந்தவர். இலங்கை அரசுடன் பிணக்கில் இருந்த இலங்கைத் தமிழர்களுக்கு பல்வேறு வகைகளிலும் உதவி புரிந்தவர். எம்.ஜி.ஆருக்குப் பின்னான ஜெயலலிதாவின் அ.தி.மு.க-வும் இலங்கை விவகாரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போக்கையே இதுவரை கடைப்பிடித்து வந்துள்ளது.

அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில், இந்திய முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்தப்படும் என அறிவித்திருந்தார் அப்போதைய அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

ஆனால், நேற்று மாநிலங்களவையில், குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு ஆதரவளித்து இலங்கைத் தமிழர்களுக்கு பெரும் துரோகத்தை இழைத்துள்ளது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.

மாநிலங்களவையில் 125 வாக்குகள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாகவும், 99 வாக்குகள் மசோதாவுக்கு எதிராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆதரவாகப் பதிவானவற்றில் 11 வாக்குகள் அ.தி.மு.க எம்.பிக்களுடயவை. ஒரு வாக்கு பா.ம.க-வுடையது. அ.தி.மு.க வாக்குகள் மசோதாவுக்கு எதிராக அளிக்கப்பட்டிருந்தால் அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறுவதில் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பையும் இழந்துவிட்டது அ.தி.மு.க. இதன்மூலம், இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியது மட்டுமல்ல; தங்கள் கழக முன்னோடிகளையும் கேவலப்படுத்தி இருக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

Also Read: "பா.ஜ.க.வின் கொள்கைதான் அ.தி.மு.க.வின் கொள்கை என்றால், அதில் அண்ணாவின் பெயர் எதற்கு?" - மு.க.ஸ்டாலின்